களுதாவளையில் காட்டு யானை அட்டகாசம் - நான்கு நாட்களாகத் தொடரும் சேதங்களால் மக்கள் பீதி!

​மட்டக்களப்பு களுதாவளை கிராமத்தில் காட்டு யானைகளின் தொடர்ச்சியான நடமாட்டத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான உடமைகளும் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

​களுதாவளை பகுதியில் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ச்சியாகக் கிராமத்திற்குள் நுழைந்துவரும் காட்டு யானைகள், குளத்துப்பக்கப் பகுதிகளில் அதிகளவில் நடமாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக வட்டி குளக்கட்டு, நாகதம்பிரான் கோயில் சூழல் மற்றும் பல குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து வீடுகள் மற்றும் வசிப்பிடங்களைச் சேதப்படுத்தியுள்ளன.

​இது குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் தெரிவிக்கையில்.

​குடியிருப்புப் பகுதிகள் மாத்திரமின்றி, அப்பகுதியில் உள்ள தென்னை மரங்கள், விவசாயத் தோட்டங்கள் மற்றும் பல்வேறு பயிர்ச் செய்கைகளும் யானைகளினால் முற்றாக அழிக்கப்பட்டு வருகின்றன.

​இப்பகுதிகளில் சமீப காலமாக எழுவான்கரைப் பகுதிகளான செட்டிபாளையம், மாங்காடு, தேற்றாத்தீவு மற்றும் களுதாவளை ஆகிய கிராமங்களிலும், அவற்றின் விவசாய நிலங்களிலும் காட்டு யானைகளின் தொல்லை தொடர்கதையாகி வருகிறது.
​இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளதோடு, இரவு நேரங்களில் நிம்மதியாகத் தூங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

​இப்பிரச்சினை தொடர்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுசென்ற போதிலும், இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும், யானைகளை அப்பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற்றித் தங்களின் உயிரும் உடமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் களுதாவளை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை