- மட்டுநேசன்-
தந்தை செல்வாவின் மனதில் உயரிய இடத்தினைப் பெற்றிருந்த `சொல்லின் செல்வர்` இராஜதுரை அவர்கள் கடந்த 7ஆம் திகதி இவ்வுலக வாழ்வை நீத்து விட்டார். இவரது இறுதிக் கிரியைகள் சென்னையில் நடைபெறவுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசி ஆனந்தன் சிறையிலிருந்த காலத்தில் அவரது பிறந்த நாளைக் கொண்டாட இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந் நிகழ்வு தொடர்பாக தந்தை செல்வாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இந்த அழைப்புக்கு மதிப்புக்கொடுக்கும் முகமாக அவர் புகையிரம் மூலம் மட்டக்களப்புக்குப் பயணமானார்.
அவரை புகையிரத நிலையத்திலிருந்து அழைத்து வர பாசி என்று அக்காலத்திலிருந்து பிரபலமாக அழைக்கப்படும் பாலிப்போடி சின்னத்துரையும், பின்னாளில் கழுகுப்படையை நிறுவிய ராஜ்மோகனும் சென்றிருந்தனர். புகையிரதத்திலிருந்து தந்தை இறங்கியதும் அவரை வரவேற்ற இவர்கள் இருவரும் விழா நிகழ்ச்சி நிரல் அடங்கிய பிரசுரத்தை அவரிடம் வழங்கினர். அதனை வாசித்த அவர் "இதில் இராஜதுரையின் பெயர் இல்லையே ? ஏன் ?" என்று கேட்டார். அவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய பதில் இவர்கள் இருவரிடமும் இல்லாததால் மௌனமாக இருந்தனர். அவ்வளவுதான்! தனது ரங்குப்பெட்டியுடன் வாடி வீட்டை நோக்கிச் சென்றார் தந்தை.
தொடர்ந்து எதையும் கேட்கவோ, இவர்களுடன் பயணிக்கவோ அவர் தயாராக இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொண்டனர். ராஜதுரையை மதிக்காத இடத்துக்குத் தான் செல்வதற்குத் தயாரில்லை என்பதே தந்தையின் செய்தி.
அன்று மாலை தபால் புகையிரதத்தில் அவர் கொழும்புக்குத் திரும்பிச் சென்றார்- இந்தச் செய்தி கட்சி வட்டாரங்களில் மிகப் பிரபலமாகிற்று. தந்தையின் மனதில் இராஜதுரை எத்தகைய உயர்ந்த இடத்தை பிடித்திருந்தார் என்பதை விளங்கினாலும், விளங்காதது போல அவரது மரணம் வரை நடித்தனர் கட்சியிலுள்ள சில பிரபலங்கள். வாகனங்களில் சிங்கள ஸ்ரீ எழுத்தைப் பொறிக்கும்படி அரசு விடுத்த உத்தரவை எதிர்த்து தனது EN 8608 மோட்டார் வண்டியின் எழுத்துக்களை தமிழில் எழுதிக் காட்சிப்படுத்தியவர் இவர்.இவருக்குப் பின்னரே ஏனைய தமிழ் அரசியல் வாதிகள் இந்த நடைமுறையைப் பின்பற்றினர்.
கட்சியை பொறுத்தவரைப் வடகிழக்கு எங்கிலும் ராஜதுரையின் அழகு தமிழைக் கேட்க மக்கள் திரண்டனர் குறிப்பாக பல மைல் தூரம் நடந்து சென்று அதனை ரசித்து விட்டு திரும்பினர் அந்த நாள் இளவயதினர். கட்சியில் திறமையான பேச்சாளர்களை வரிசைப்படுத்தும்போது இரண்டாமிடம் .மூன்றாமிடம் யார் யாருக்கு என்பதில் முரண்பாடு இருக்கலாம்; முதலிடம் இராஜதுரை அவர்களுக்கே இருந்தது தந்தை செல்வாவின் மரணம்வரை. சொல்லில் செல்வராக இருந்ததைப் போலவே செயலில் வல்லவராகவும் அவர் இருந்தார். இவர் விதைத்த தமிழ்த்தேசிய விதை கிழக்கு மாகாணத்தில் உயரிய அறுவடையைத் தந்தது. கடந்த பொதுத்தேர்தல் முடிவை முழு இலங்கை ரீதியாக நோக்கினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே அனுர அலை வீசவில்லை. வேட்பாளர்களை பெரும்பாலும் அங்குள்ள மக்கள் பொருட்படுத்துவதில்லை. என்ன இருந்தாலும் தாங்கள் தமிழரசுக் கட்சியினர் தானே என மூன்றாவது தலைமுறையும் சிந்திக்கின்றதென்றால் மூலவிதையின் வீரியம் அதற்குக் காரணம்.
தந்தைசெல்வாவின் இறுதி நிகழ்வின் போது பிரமாண்டமான மக்கள் கூட்டத்தில் இவருக்கு உரையாற்ற மூன்று நிமிடங்கள் வழங்கப்பட்டது. "தந்தை செல்வாவுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டு 30 வருட காலம் அவருடன் உறவாகப் பழகிவந்துள்ளேன். அவரைப் பற்றி மூன்று நிமிடங்களில் பேசி முடியுங்கள் என்று பணிக்கப்பட்டுள்ளேன். மூன்று நிமிடங்களில் என்னால் எத்தனைப் பேச முடியும் கண்ணீரைத் தவிர ... " என்று இவர் ஆற்றிய உரை அனைவரின் இதயத்தைத் தொட்டு கண்ணீரை வரவழைத்தது..
தந்தையின் மரணத்தின் பின் சூழ்ச்சி வலை பலமாகப் பின்னப்பட்டது.மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதி என்பது உருவாக்கப்பட்டதே. தமிழர் . முஸ்லீம் என தலா ஒருவர் தெரிவாக வேண்டும் என்பதற்காகத்தான். 1977 பொதுத்தேர்தல் தமீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு என அறிவிக்கப்பட்டதென்றால் அதில் கட்சி சார்பாக ஒரு முஸ்லிமையும் (தமிழரசுக் கட்சிச் சின்னத்தில்) போட்டியிட வைத்திருக்கலாமே? இன்று முஸ்லீம் மாவீரர்களை ஏற்க மாட்டோம் என கிளிநொச்சியில் சிலர் அடம்பிடிப்பதைப் போலவே அன்று அமிர்தலிங்கம் மட்டக்களப்பில் முஸ்லிங்களுக்குரிய உரிமையை ஏற்க மறுத்தார். தமிழர்களை முழுமையாக நம்ப முஸ்லீம் மக்கள் தயங்குவதக்கான விதையை அன்று மட்டக்களப்பு விடயத்தில் அமிர்தலிங்கம் விதைத்தார். இன ஐக்கியத்தை விட தொடர்ச்சியாக மட்டக்களப்பில் வெற்றி பெற்று வந்த ராஜதுரை மண்கவ்வ வைப்பதே அவரது இலக்காக இருந்தது .
கட்சிக்குள் இளைஞர் மத்தியில் காசி ஆனந்தனுக்கு செல்வாக்கு இருந்தது. இராஜதுரையை போலவே அவரும் வளர்ந்து வந்தார். எனவே, ஒரே கல்லில் இரு மாங்காய்களை அடிக்க முனைந்தார் அமிர். கொடுக்கும் குடைச்சலை மீறி இராஜதுரை வென்றால் காசி தோற்பார். அரசியலில் அவர் இனி தலையெடுக்க முடியாது. இராஜதுரை வென்றாலும் அதற்கு முன்னதாக கொடுக்கும் குடைச்சலில் கட்சியை விட்டு அவர் போகும் நிலையை உருவாக்க வேண்டும் என நினைத்தார்.
உண்மையில் காசி ஆனந்தனை பாராளுமன்ற உறுப்பினராக்க வேண்டுமென அமிர்தலிங்கம் நினைத்திருந்தால் யாழ்ப்பாண தொகுதியில் அவரை போட்டியிட வைத்திருக்கலாம். வட, கிழக்கு இணைந்த தாயகம் என்ற தமிழீழ கோரிக்கைக்கு அது வலுச் சேர்த்திருக்கும். காசி சிறையிலிருந்து விடுதலையானதும் மட்டக்களப்புக்குப் போகவில்லை. காலை யாழ்தேவி மூலமாக யாழ்ப்பாணத்துக்கே வந்தார். அவர் வந்த புகையிரதம் தமிழ் இளைஞர்களால் நிரம்பிவழியும் நிலையில் இருந்தது. எனது வெள்ளைச் சட்டை சிவப்பு நிறமாக மாறிவிட்டது என்று காசி உணர்ச்சி தளும்பப் பேசினார். அந்தளவு தொகை தமிழ் இளைஞர்கள் அவருக்கு இரத்தத் திலகமிட்டனர். யாழில் போட்டியிட காசி தயங்கியிருந்தால் தமிழ் இளைஞர் பேரவையினர் மூலமாக குறைந்தது 25 ஆயிரம் யாழ்ப்பாணம் தொகுதி வாக்காளரிடம் கையொப்பம் வாங்கி அவருக்கு அனுப்பியிருக்கலாம்.
காசி ஆனந்தன் யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்டிருந்தால் குமார் பொன்னம்பலம் எதிர்த்துப் போட்டியிட்டிருக்க மாட்டார். யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட யோகேஸ்வரனும் மன்னாரில் போட்டியிட்ட சூசைகதாசனும் மக்களுக்கு பரிச்சயமில்லாதவர்கள். அப்படியிருந்தும் மக்களின் மனதில் பரிச்சயமான காசி ஆனந்தனை தவிர்த்து இராஜதுரையுடன் மோத வைத்து பலிக்கடா ஆக்கியது அமிரின் குள்ளத்தனமன்றி வேறேது?
இன்று கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் தோற்ற சுமந்திரன் ஏதேதோ காரணங்களைக் காட்டி வெற்றி பெற்ற சிறீதரனுக்குக் குடைச்சல் கொடுப்பது போலவே சொந்தத் தொகுதியான வட்டுக்கோட்டைத் தொகுதியில் தோற்ற அமிர்தலிங்கம் தொடர்ச்சியாக மட்டக்களப்பில் வென்று வந்த இராஜதுரையை வேட்பாளர் நேர்முகத் தேர்வுக்கு வரவேண்டும் என ஆணையிட்டார். உண்மையில் வேட்பாளர் நேர்முகத் தேர்வை நடத்தும் சகல தகுதியும் இராஜதுரைக்கு உண்டு என்பது கட்சியில் எவருக்கும் தெரியாததா என்ன?
மட்டக்களப்பில் பதற்றமான சூழ்நிலை உருவானதால் இராஜதுரைக்கோ அல்லது காசியானந்தனுக்கோ சார்பாக வடக்கிலிருந்து எவரும் பரப்புரைக்குச் செல்லக்கூடாது என முடிவெடுக்கப்பட்டது. அதனையும் மீறி கோவை மகேசன், ஈழவேந்தன் போன்றோர் காசி ஆனந்தனுக்காகப்பரப்புரை செய்தனர். ஓட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைப் தாழ்ப்பாள் என்ற கதையாக அதுவும் காசி ஆனந்தனுக்குப் பாதகமாகவே முடிந்தது.
கட்சித் தலைமை,எதிர்க்கட்சித் தலைமை எதற்கும் இராஜதுரை தகுதியானவரல்ல என 1970 தேர்தலில் படுதோல்வியடைந்ததால் தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிய மு. சிவசிதம்பரமும் அமிர்தலிங்கமும் தீர்மானித்ததையும் 1977 தேர்தலில் கொடுத்த குடைச்சலும் தந்தை செல்வா இல்லாத கட்சியில் தன்னால் தொடர்ந்து நீடிக்க முடியாது என்ற முடிவுக்கு இராஜதுரையை தள்ளின.
ஊடகவியலாளராக, எழுத்தாளராக நடிகராக ஏற்கெனவே மின்னிய இராஜதுரை வீரமாகாளி அம்மன் கோயிலில் இருந்த சங்கிலியனுடையது எனக் கருத்தப்பட்ட வாளை தலைக்கு மேலால் மூன்று தடவை சுற்றி "தமிழீழ இலட்சியத்தை கைவிட மாட்டேன்" என்று அமிர்தலிங்கம் சபதமெடுத்த நடிப்பை பார்த்ததும் தன்னால் இவ்வளவு தத்துரூபமாக நடிக்க முடியாதெனக் கருதி கட்சியிலிருந்து விலக முடிவெடுத்தார்.
அத்துடன் ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த ஜே ,ஆர் ருடன் சேர்ந்து அரசியலைத் தொடர முடிவெடுத்தார்.அச் சமயம் கட்சியிலிருந்து தான் விலக வேண்டியமைக்கான காரணங்களை விளக்கி அன்று அவர் இராஜதுரையை ஆற்றிய உரை பரபரப்பாக எல்லா இடங்களிலும் ஒலித்தன அவர் பக்கம் இருந்த நியாயம் ஏற்கக் கூடியதாக இருந்தாலும் அவர் கட்சியில் இல்லாமலிருப்பது பொதுவாக தமிழருக்கு கவலையாக இருந்தது. (அமிதலிங்கம் ,மங்கையக்கரசி ,சிவசிதம்பரம் போன்ற ஒரு சிலரைத் தவிர )
இந்து சமய விவகாரம் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சை ஜே.ஆர் இவருக்கு வழங்க முன்வந்தார்.இவர் கட் சி மாறுவதற்குகேற்ப வகையில் சட்டத்திருத்தத்தையும் மேற்கொண்டார்.தனக்குக் கிடைத்த பதவியை கொண்டு முடிந்ததைத் சாதித்தார் இராஜதுரை. விபுலானந்தர் இசை நடனக் கல்லூரியின் உருவாக்கம் இவரது முயற்சியின் விளைவே. அது இன்று கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினுள் இயங்குகின்றது.
சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள இவரது ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் பல குடும்பங்கள் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். சொத்துக்கு குவிக்கும் குறிப்பாக பொதுத் தேவைக்கு கூட தமது உடைமையான நிலங்களை கொடுக்க மறுக்கும் அரசியல் வாதிகள் இவரிடமிருந்து கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம்.
சிங்களவர்களைப் பொறுத்தவரை ஜே .வி. பி என்ற ஒரேயொரு ஆயுத அமைப்பே வரலாற்றில் தோன்றியது. ஆனால் வடகிழக்கில் உள்ள தமிழர்களோ மொத்தமாக 36 அமைப்புக்களைத் தோற்றுவித்தனர் . இத்தனை அமைப்புக்கள் தோன்றியும் இவற்றில் ஏவையும் தாம் இயங்கிய காலத்தில் இராஜதுரை தவறானவர் என்றோ துரோகி என்றோ குறிப்பிடவில்லை. என்பது முக்கிய விடயம் இவற்றில் ஒன்றான தமிழீழ விடுதலைக் கழுகுகள் படையை நிறுவிய ராஜ்மோகன் 1977 தேர்தல் மேடைகளில் ராஜதுரைக்காக பரப்புரை செய்தவர்.படையினரின் தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து புளொட் டில் இணைந்து செயற்பட முன் வந்த இவரை அந்த இயக்கமே கொன்று தொலைத்தது இவ் விடயத்தை புளொட் முக்கியஸ்தர் தனது எழுத்துக்கள் மூலம் உறுதி செய்துள்ளார். இன்று புளொட்டும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சியாக கருதப்படுகிறது.
இராஜதுரை கிராமம் கிராமமாக தமிழ்த் தேசிய உணர்வை விதைத்ததன் விளைவாகவே ஆயிரக்கணக்கான போராளிகள் பின்னாளில் உருவாகின. குறிப்பாக பாசி என்ற யோகன் பாதர், என்று அழைக்கப்படும் பாலிப்போடி சின்னத்துரையும்.பேரின்பமும் இறுதி யுத்தம் வரை பயணித்தனர். ஆரம்பத்தில் தமிழ் மாணவர் பேரவை.இளைஞர் பேரவை மூலமாக பங்களிப்பை வெளிப்படுத்திய பரமதேவா ,பன்னிர்செல்வம் ,சட்டத்தரணி பொன். வேணுதாஸ் சிவஜெயம் முதலானோர் மாவீர்கள் ஆகினர் இதற்கெல்லாம் அன்று கிழக்கு மண்ணில் இராஜதுரை ஊட்டிய தமிழ் உணர்வுதான் காரணம் என்பதை மறுக்க முடியாது.
இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தின் துணைக்குழுக்களாக விளங்கியவர்களின் ஐந்து தரப்பினர் இன்று தமிழ்த் தேசிய வாதிகளாக உலாவுகின்றனர் இந்த ஐந்து தரப்புமே பிரிவினைக் கெதிராக சத்தியப்பிரமாணம் எடுத்துவிட்டே எம் .பி பதவியை ஏற்றனர். இவர்களில் எவருக்கும் ராஜதுரையை விமர்சிக்கும் தகுதியில்லை.இவர்களில் எவருக்கும் ராஜதுரையை விமர்சிக்கும் தகுதியில்லை.