மட்டக்களப்பு மேய்ச்சல் தரையில் மாடு மேய்க்க சென்ற 4 பேர் கைது!

மட்டக்களப்பு கெவிளியாமடுவில் மாடுமேய்க்க சென்ற நால்வரை மங்களகம பொலிசார் கைதுசெய்து பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கெவிளியாமடு காத்தார் அல்லிச்சேனை பகுதியில் மேய்ச்சல் தரையில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மகிழடித்தீவு தெற்கை சேர்ந்த சொர்ணலிங்ம், குருகுலசிங்கம், மகேஸ்வரலிங்கம், நாற்பதாம் கிராமத்தை சேர்ந்த யோகநாதன் ஆகிய நான்கு பண்ணையாளர்களையும் இன்று மங்களகம பொலிசார் கைது செய்து சென்று சரீரப்பிணையில் விடுதலை செய்ததுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி அம்பாறை நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மயிலத்தமடுவில் மாடுமேய்க்கச் சென்ற ஏழுபேரை அங்குள்ள சிங்களவர்கள் அடித்து துன்புறுத்தி மங்களகம பொலிசாரிடம் ஒப்படைத்து நீதிமன்றில் கொண்டு சென்று பிணையில் விடுவித்து தற்போது நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மேய்ச்சல் தரைகளை அத்துமீறி அபகரிப்பதும் சேனைப் பயிர்செய்கை, முந்திரிசெய்கை என்ற போர்வையில் திட்டமிட்ட குடியேற்றம் செய்வதற்காக நேரடியாக பண்ணையாளர்களை குண்டர்களை கொண்டு அச்சுறுத்துவதும் பொலிசாரை கொண்டு கைது செய்வதும் தொடர்கதையாக உள்ளதாக மட்டக்களப்பு மாடு வளர்க்கும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.




புதியது பழையவை