சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை! - நம்பிக்கையும் சிக்கல்களும்



இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பரிந்துரைத்திருக்கிறார்.

தேசிய மட்டத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதில் இலங்கை அரசாங்கத்தின் இயலாமை மற்றும் விருப்பமின்மை ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச குற்றங்கள் தொடர்பாக நீதியை உத்தரவாதப்படுத்தும் சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தருணம் வந்திருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவர் இரண்டு முக்கிய தெரிவுகளையும் முன்வைத்திருக்கிறார்.

முதலாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடுவது, இரண்டாவது உறுப்பு நாடுகள் தமது பிராந்தியத்துக்கு வெளியிலான அல்லது உலகம் தழுவிய நியாயாதிக்கத்தின் கீழ் தமது தேசிய நீதிமன்றங்களில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சர்வதேச குற்றச்செயல்கள் தொடர்பாக புலன் விசாரணைகளையும் வழக்குத் தொடுப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறான பரிந்துரைகள் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

எனினும் இவ்வாறான ஒரு பரிந்துரையை முன்வைக்க வேண்டிய நிலைக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம் வந்துவிட்டது.

2018ம் ஆண்டு ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராக இருந்த இளவரசர் செயிட் ராட் அல் ஹூசேன் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில், ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை இலங்கை அரசு கிட்டத்தட்ட கைவிட்டு விட்டதனால் மாற்று வழிகளை உலக நாடுகள் பரிசீலிக்குமாறு பரிந்துரைப்பதாக கூறியிருந்தார்.

தற்போதைய உயர்ஸ்தானிகர் பச்லெட் அம்மையார் முன்வைத்துள்ள பரிந்துரைகள் தான் அந்த மாற்று வழிகள் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த 2012ம் ஆண்டில் இருந்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அதிகபட்ச அதிகார வரம்புக்குள் செய்யக்கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு விட்ட நிலையில் இவ்வாறானதொரு முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாததே.

இதனால் தான் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இரண்டு முக்கியமான தெரிவுகளையும் பரிந்துரைத்திருக்கிறார்.

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றங்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விசாரிக்க உருவாக்கப்பட்டுள்ளதே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.

இலங்கையில் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான மோசமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பது ஐ.நா.அறிக்கைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைப்படி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முடியுமா என்ற பலமான கேள்வி உள்ளது.

ஏனென்றால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை கொண்டு செல்வதற்கு சில விதிமுறைகள் உள்ளன. ரோம் உடன்பாட்டுக்கு அமையவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இந்த உடன்பாட்டில் இலங்கை கையெழுத்திடவில்லை.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட நாடுகளால் அல்லது கையெழுத்திட்ட நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படுவதில் சிக்கல் இல்லை.

இந்த நிபந்தனைக்கு அமைய இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. எனவே அடுத்த தெரிவாக உள்ள ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஊடாகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட நபரால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஐ.நா.பாதுகாப்புச் சபை பரிந்துரைக்க வேண்டும்.

இது ஒன்றும் இலகுவான காரியமல்ல. ஏனென்றால் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அதிலுள்ள ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளும் எதிர்ப்பை வெளியிடாமல் இருக்க வேண்டும்.

சீனா,ரஷ்யா ஆகிய நிரந்தர உறுப்பு நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு இலங்கையை காப்பாற்றக்கூடிய நிலையில் இருக்கின்றன.

இந்த நிலை கடந்த ஒரு தசாப்த காலமாகவே நீடித்து வருவது தான். இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் பாதுகாப்புச் சபையின் ஊடாக கையாளப்பட முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு செல்வதற்கு மூன்றாவது ஒரு வாய்ப்பும் இருக்கிறது.

தனிநபர்கள் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்ற பிற மூலங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணையை ஆரம்பிக்க முன் விசாரணை அமர்வில் (PreTrial Chamber) உள்ள நீதிபதிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வழிமுறை கையாளப்படுவது அரிதானது.

மியான்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரொஹிங்கியா அகதிகளைக்கொண்டு மியான்மாருக்கு எதிரான ஒரு விசாரணை பங்களாதேஷ் மூலமாக தொடங்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்று இலங்கை தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை பலருக்கு உள்ளது.

ஆனாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையில் எந்தவொரு நாட்டையும் முன்னிறுத்த முடியாது. தனிநபர்களைத் தான் முன்னிறுத்தலாம்.

அதுவும் ஒருவரையோ இரண்டு பேரைத் தான் குற்றம் சாட்ட முடியும். இதற்கான வழிமுறைகள் சிக்கலானவை.

இலங்கையில் இடம்பெற்ற போரில் மீறல்களுடன் தொடர்புடையவர்கள் என்று பல படை அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். அரசியல் ரீதியாக தலைமை தாங்கியவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர்களையெல்லாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்துவது எப்படி? இவ்வாறான நிலையில் தான் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இன்னொரு யோசனையை முன்வைத்திருக்கிறார்.

உறுப்பு நாடுகள் தமது பிராந்தியத்துக்கு வெளியிலான அல்லது அகிலம் தழுவிய நியாயாதிக்கத்தின் கீழ் தமது தேசிய நீதிமன்றங்களில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சர்வதேச குற்றச் செயல்கள் தொடர்பாக புலன் விசாரணைகளையும் வழக்குத் தொடுப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

பிறநாடுகளில் போர்க்குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்து வழக்குத் தொகுக்கும் சட்டங்கள் பல நாடுகளில் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துமாறே பசலெட் அம்மையார் பரிந்துரைத்திருக்கிறார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் முன்னிறுத்துவதில் உள்ள சிக்கல்களால் தான் அவர் இந்தப் பரிந்துரையை முன்வைத்திருக்கிறார்.

அதேவேளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்கு பரிந்துரைத்து விட்டார் என்பதற்காக அது உடனடியாக நடந்து விடும் என்றில்லை.

உள்ளக வாய்ப்புகள் இனிமேல் இல்லை என்று நிரூபிக்கப்பட்ட பின்னர் தான் சர்வதேச வாய்ப்புகள் ஆராயப்படும்.

இலங்கை அரசுக்கு உள்ளகப் பொறிமுறைகளை அமைக்கும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. பின்னர் கலப்பு விசாரணைப் பொறிமுறை வாய்ப்பும் கொடுக்கப்பட்டது. இவை எதுவும் நடக்காத நிலையில் இனிமேலும் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தான் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையைப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐநா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பரிந்துரைத்து விட்டார் என்பதற்காக எல்லாம் உடனடியாக நடந்து விடும் என்று கற்பனை செய்யக்கூடாது. இதற்கெனப் பல படிமுறைகள் உள்ளன. தாண்ட வேண்டிய பல தடைகள் இருக்கின்றன. நிறைவேற்றப்பட வேண்டிய பல கடப்பாடுகள் உள்ளன.

இனப்படுகொலை போர்க்குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றன என்பதை நிரூபிக்கத் தேவையான சாட்சிகள் ஆதாரங்கள் திரட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டுத் தான் தண்டனையைப் பெற்றுக் கொடுக்க முடியும்.

இதற்குத் தாண்ட வேண்டிய படிமுறைகள் என்ன? என்பது பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றது.

முதலில் பூர்வாங்க விசாரணைகள்ரூPreliminary examinations)

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகார எல்லைக்குட்பட்ட குற்றங்கள் தொடர்பான போதுமான சான்றுகள் உள்ளதா, உண்மையான தேசிய நடவடிக்கைகள் உள்ளதா, மற்றும் விசாரணையை ஆரம்பிப்பது நீதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களுக்கு உதவுமா என்று வழக்குத்தொடுனர் பணியகம் தீர்மானிக்க வேண்டும். இவற்றுக்கான சாத்தியம் இல்லையென்றால் வழக்குத்தொடுனர் பணியகம் அதனை நிராகரிக்கும்.

இரண்டாவது கட்டமாக விசாரணைகள்( Investigations)

குற்றங்களுக்கான ஆதாரங்களைச் சேகரித்து ஒரு சந்தேக நபரை அடையாளம் காட்டிய பின்னர் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை அல்லது தானாக முன்வந்து முன்னிலையாவதற்கான அழைப்பாணையை அனுப்புவதற்கு நீதிபதிகளை வழக்குத்தொடுனர் நாடுவார்.

இதன்போது விசாரணையைத் தொடங்குவதற்குத் தேவையான விடயங்கள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் அல்லது குற்றங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகார எல்லைக்குட்பட்டதாக இல்லாவிட்டால் வழக்கு நிராகரிக்கப்படும். எனினும் புதிய ஆதாரங்களை முன்வைத்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த வழக்குத்தொடுனருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

மூன்றாவது முன் விசாரணை கட்டம்(Pre-Trial stage)

முதலில் மூன்று நீதிபதிகள் சந்தேகநபரின் அடையாளத்தை உறுதி செய்து அவர் குற்றச்சாட்டுகளை புரிந்து கொள்வதை உறுதிப்படுத்துவர்

வழக்கு விசாரணைக்குச் செல்ல போதுமான ஆதாரங்கள் இருந்தால் வழக்குத்தொடுனர் எதிர் தரப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு சட்டப் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து இரண்டு மாதங்களுக்குள் விசாரணைகளை தொடங்குவதற்கு நீதிபதிகள் முடிவு செய்வர். சந்தேக நபர் கைது செய்யப்படா விட்டால் அல்லது முன்னிலையாகாவிடின் சட்டப்பூர்வ சம்ர்ப்பிப்புகளைச் செய்யலாமே தவிர விசாரணைகளைத் தொடங்க முடியாது.

நான்காவதாக விசாரணைக் கட்டம்(Trial stage)

மூன்று விசாரணை நீதிபதிகள் முன்பாக குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றங்களை வழக்குத்தொடுனர் நிரூபிக்க வேண்டும். அந்த நீதிபதிகள் அனைத்து ஆதாரங்களையும் கருத்திற்கொண்டு ஒரு தீர்ப்பை அல்லது தண்டனையை வெளியிடுவார்கள். நீதிபதிகள் ஒரு நபருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் ஆயுள் தண்டனையையும் விதிக்கலாம்.

தீர்ப்புக்கு எதிராக வழக்குத் தொடுனராலோ எதிர்த்தரப்பினாலோ மேன்முறையீடு செய்யப்படுவதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிபதிகள் இழப்பீட்டு உத்தரவைப் பிறப்பிக்கவும் போதிய சாட்சியங்கள் இல்லாவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஐந்தாவதாக மேன்முறையீட்டுச் சட்டம்(Appeals stage)

இரண்டு தரப்புக்களுமே தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். பாதிக்கப்பட்டவர் அல்லது தண்டிக்கப்பட்டடவர் இழப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம்.

மேன்முறையீட்டடை 5 நீதிபதிகளைக் கொண்ட ஆயம் முடிவு செய்யும். முன்னைய தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் இதில் இடம்பெற முடியாது. மேன்முறையீட்டு நீதிபதிகள் இறுதி தீர்ப்பையோ, மறு விசாரணைக்கோ உத்தரவிடலாம்.

ஆறாவது தண்டனையை நடைமுறைப்படுத்துல்(Enforcement of sentence)

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள் தண்டனையை நிறைவேற்ற இணங்கியுள்ளன.

குற்றம் சாட்டப்பட்டவரின் மீது குற்றமில்லை என்று நிரூபிக்கப்பட்டால் அவர் விடுவிக்கப்படுவார்.

இந்தளவு படிமுறைகளையும் கடந்து தான், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நியாயத்தை பெறமுடியும். இதற்கு 10 – 15 ஆண்டுகள் கூட ஆகலாம். ஏற்கனவே விசாரணையில் உள்ள வழக்குகள் அவ்வாறு தான் உள்ளன.

எனவே ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பரிந்துரையை வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகையான நம்பிக்கையை கொடுத்துவிடக்கூடாது. அது அவர்களை இன்னும் சோர்வடையவும், நம்பிக்கையிழக்கவும் செய்து விடும்.

புதியது பழையவை