இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!!



இலங்கையில் மேலும் 8பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 61 வயதான ஆணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து கொவிட் 19 தொற்று உதியானவராக அடையாளம் காணப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர்,ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்தார். கொவிட்19 நிமோனியா நிலை, நீரிழிவு, இதய நோய் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 52 வயதான ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து கொவிட் 19 தொற்றுறுதியானவராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் கடந்த 29 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியா, சிறுநீரக நோய் பாதிப்பு, மோசமடைந்த நீரிழிவு நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொக்குனவிட பகுதியை சேர்ந்த 58 வயதான பெண்ணொருவருக்கு கொத்தலாவல வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுதியானதன் பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அங்கு கடந்த 29 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட்19 நிமோனியா நிலை, இதயம் செயலிழந்தமையே அவரது மரணத்துக்கான காரணமென வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், ராஜகிரிய பகுதியை சேர்ந்த 79 வயதான ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவராக கண்டறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 29 ஆம் திகதி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கும் கொவிட் 19 நியுமோனியா, நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், இதயம் நோய் ஆகியவையே காரணம் என கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 93 வயதான ஆணொருவர் கடந்த 28 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார். கொவிட்19 நிமோனியா அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மடுவல பகுதியை சேர்ந்த 62 வயதான பெண்ணொருவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு கடந்த 29 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம்,கொவிட் 19 நியுமோனியாவுடன் இதயம் செயலிழந்தமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வாதுவை பகுதியை சேர்ந்த 39 வயதான பெண்ணொருவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார்.

குருதி விசமானமையினால் ஏற்பட்ட அதிர்ச்சி,கொவிட் 19 நியுமோனியா நிலையே, அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 63 ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்19 தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார்.

கொவிட் 19 நியுமோனியா, குருதி விசமானமை, சீறுநீரகம் செயலிழந்தமை என்பன அவரது மரணத்திற்கான காரணம் என கூறப்பட்டுள்ளது’ என அரசாங்க தகவல் திணைக்கள அறிக்கை குறிப்பிடுகிறது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 293 ஆக உயர்வடைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை