நாள் 3 ஒட்டுசுட்டானை நோக்கி நகரும் பேரணி!

புதுக்குடியிருப்பு நகரத்தில் பெருமெழுச்சியுடனான பேரணி இடம்பெற்றது. இதை தொடர்ந்து, ஒட்டுசுட்டான் சந்தியை நோக்கி வாகன பேரணி சென்று கொண்டிருக்கிறது. ஒட்டுசுட்டானில் மீண்டும் பேரணி இடம்பெறும்.
பேரணி புதுக்குடியிருப்பை நெருங்கிய போது, புதுக்குடியிருப்பு பொலிசார் வழிமறித்து சுகாதார நடைமுறைகள் தொடர்பான நீதிமன்ற கட்டளையை வழங்கினர்.

இதனால் சிறிது நேரம் பரபரப்பான நிலைமையேற்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அடைந்து அங்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதை தொடர்ந்து, அங்கு மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

3.20 PM

பேரணி முல்லைத்தீவு நகரத்தில் பயணித்து, மாவட்ட செயலகம் வரை சென்றது. அங்கிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வரை வாகன பேரணி பயணிக்க ஆரம்பித்துள்ளது.

முல்லைத்தீவிற்குள் பேரலையாக பேரணி நுழைந்துள்ளது. முல்லைத்தீவு மக்கள் எதிர்பாராதளவில் திரண்டு, பெரும் காட்டாற்று வெள்ளமாக பேரணி முன்னேறி வருகிறது.

முல்லைத்தீவிலிருந்து இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் பேரணியும், போராட்டத்துடன் இணைந்துள்ளது.

வடக்கிற்குள் நுழைந்த பேரணி, நாயாறு பாலத்தினடியில் பேரணியாக கோசமெழுப்பியபடி முன்னகர்ந்தது. இராணுவ முகாம் அந்த பகுதியில் இருந்தது. இராணுவத்தை அங்கிருந்து வெளியேறும்படி போராட்டக்காரர்கள் கோசமெழுப்பினர்.

பின்னர் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று, அங்கும் கால்நடையாக பேரணி சென்றது.

பின்னர் சிலாவத்தை ஊடாக முல்லைத்தீவு நகர் சென்று, முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி செல்லவுள்ளது.

தற்போது சுமார் 200 வரையான வாகனங்கள் பேரணியாக செல்கிறது.

1.00 PM

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி வடமாகாணத்திற்குள் நுழைந்தது.

கிழக்கின் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலில் ஆரம்பித்த பேரணி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்ளை ஊடறுத்து, தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்குள் நுழைந்துள்ளது.

11.57 AM

தொடர்ந்து  முன்னேறும் பேரணி தற்போது புல்மோட்டையை கடந்து தென்னன்மரவடியை நெருங்கி வருகிறது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி மீது திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள காடையர்களால் பரவலான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

திருகோணமலையிலிருந்து புல்மோட்டை நோக்கி செல்லும் போது கல்லறைப்பாலம் பகுதியில் வீதி முழுவதும் ஆணிகள் வீசப்பட்டுள்ளன. இதில் பேரணி வாகனங்கள் மூன்று சிக்கின.

வாகனங்களின் காற்று போனதால், பேரணி அங்கு தடைப்பட்டு நிற்கிறது.

ஆணி தூவப்பட்டுள்ள இடத்திற்கு அண்மையில் பொலிஸ் காவலரண் ஒன்றும் உள்ளது.







புதியது பழையவை