மத்ரஸாக்களையும் சில அடிப்படை வாத இயக்கங்களையும் தடை செய்யப் போகிறேன் - இலங்கை பாதுகாப்பு அமைச்சர் அதிரடி அறிவிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கு உயிர் ஆபத்து இருக்கும் எனில், அவரால் இப்படியான ஒரு நடைப்பயணத்தை மேற்கொள்ள முடியாது, அதன் காரணத்தால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த "எஸ் ரீ எப்" பாதுகாப்பை நீக்க உத்தரவிட்டுள்ளேன். சாதாரண பாராளுமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பு மட்டுமே இனி அவருக்கு வழங்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் "ஹிரு" தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் குறிப்பிட்டார்.
"மத்ரஸா" கல்விக்கூடங்களுக்கு இன்னும் சில தினங்களில் தடை கொண்டுவரப்படுவதுடன், நாட்டில் செயல்படும் சில அடிப்படை வாத இயக்கங்களையும் தடை செய்யப் போவதாக அவர் அப்பேட்டியில் குறிப்பிட்டார். ஒரு நாட்டில் பிறக்கும் குழந்தை 18 வயதாகும் வரை அந்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைவான கல்வியையே கற்க வேண்டும், அவர்களின் கல்வியை வேறு யாரும் தமக்கு வேண்டிய முறையில் அமைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டதுடன், இச்சிரமமான பணியைச் செய்து முடிக்க ஜனாதிபதி தன்னை பணித்துள்ளதாகவும், அதற்கு உங்களைப் போன்ற ஊடகவியலாளர்களின் உதவியும் தேவை என "ஹிரு" ஊடகவியலாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்