ஈழத்தமிழர் விவகாரத்தில் வல்லாதிக்க சக்திகளின் விருப்பங்களே நிறைவேறியது.



தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் 13 ஆம் திருத்தச் சட்டத்தை தும்புத்தடியாலும் தொட்டுப் பார்க்க மாட்டோம் என்று ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் கூறியிருந்த நிலையிலும், 13 தான் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு தீர்வு என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.

ஜெனிவா மனித உரிமைச் சபையில் நேற்று உரையாற்றிய இந்திய பிரதிநிதி இந்திரா மணிபாண்டே 13 தான் அரசியல் தீர்வு என்று கூறியிருக்கின்றார். ஆகவே ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விவகாரம் மீண்டும் இந்தியா அமெரிக்கா போன்ற வல்லாதிக்க சக்திகளின் விருப்பங்களுக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதே வெளிப்படை. மனித உரிமைச் சபை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வெளியிட்ட அறிக்கையில் கூட ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கான பொறுப்புக் கூறல் மாத்திரமே வலியுத்தப்பட்டிருக்கின்றது.

கால அட்டவணையை அமைத்து பொறுக் கூறலை முன்னெடுக்க வேண்டுமென அமெரிக்கா பிரிதானியா கனடா ஜேர்மன் உள்ளிட்ட 14 நாடுகள் மனித உரிமைச் சபையில் ஸ்ரீலங்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆகவே இம்முறையும் ஜெனிவா மனித உரிமைச் சபை, ஈழத்தமிழ் மக்கள் விவகாரத்தில் வல்லாதிக்க சக்திகளின் விருப்பங்களையே பூர்த்தி செய்திருக்கின்றது.

ஜெனிவாவில் ஸ்ரீலங்கா விவகாரத்தை கையாளும் பிரித்தானியாவை தலைமையகமாக கொண்ட கருக்குழு நாடுகள் வழங்கிய பரிந்துரை கூட இந்தியாவை மையமாக கொண்ட இந்தோ -பசுபிக் பாதுகாப்பு என்பதையே நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுத்தியுள்ளன.

இவ்வாறான ஒரு நிலையில் 13 மாத்திரமே தீர்வு என இந்தியா தொடர்ச்சியாக கூறுவதானது ஸ்ரீலங்கா ஒற்றையாட்சி அரசின் நலன்களையும் பேணுவதாகவே உள்ளது. பௌத்த தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தி ஸ்ரீலங்கா ஒற்றறையாட்சி அரசியல் யாப்பை பலப்படுத்தி வரும் சிங்கள ஆட்சியாளர்கள் 13 ஆது திருத்த சட்டத்திலுள்ள மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை கொழும்புக்கு மாற்றி வருகின்றார்கள்.

குறிப்பாக காணி பொலிஸ் அதிகாரங்கள் இது வரை பகிரப்படாத நிலையில் கொழும்பிலிருக்கும் சிங்கள ஆட்சியாளர்களே கையாண்டு வருகின்றனர். இது இந்தியாவிற்கு தெரியாதது அல்ல. அப்படியிருந்தும் 13 ஆம் திருத்தம் என ஜெனிவாவில் கூறுவது வேடிக்கையானது.

2015 ஆம் ஆண்டு மைத்திரி ரணில் அரசாங்கத்தின் போது மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் சபை அமர்வில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலும் 13 வலியுறுத்தப்பட்டிருந்தது. 6 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் 13 தான் தீர்வு என இந்தியா கூறியிருப்பது ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையை விட தமது நலன்களே முக்கியமானது என்று இந்தியா பகிரங்கப்படுத்தியிருக்கின்றது.

நேற்று வியாழக்கிழமை மனித உரிமைச் சபை ஆணையாளர் ஸ்ரீலங்கா தொடர்பாக வெளியிட்ட வெறுமனே மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் ஜனநாயக விரோத குற்றச்சாட்டுக்கள் ஆகியவற்றை ஸ்ரீலங்கா கைவிட வேண்டுமென்றும், இலங்கை மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் பொதுப்படையான வாசகங்களே காணப்படுகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான சுயநிர்ணய உரிமை பற்றியோ இன அழிப்பிற்கான விசாரணை பற்றியோ எந்த ஒரு வாசகங்களும் அறிக்கையில் இல்லை.

ஆக இந்தோ-பசுபிக் பாதுகாப்பை பிரதானப்படுத்திய அமெரிக்க இந்திய நலன்கள் மற்றும் அந்த நாடுகளின் ஆலோசனைகள் போன்றவற்றின் அடிப்படையில் மாத்திரமே ஜெனிவா மனித உரிமைச் சபை செயற்படுகின்றதா என்ற கேள்விகள் எழுகின்றன.

ஆகவே 2009 ஆம் ஆண்டு சர்வதேச நிறுவனங்கள் வன்னியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் சாட்சியங்கள் இன்றி நடத்தி முடிக்கப்பட்ட ஈழப் போருக்கான நியாயங்கள் ஜனநாயக வழியில் கூட கிடைக்காது என்பதற்கு ஜெனிவா மனித உரிமைச் சபையின் உறுப்பு நாடுகளின் கருத்துக்கள் கோடிகாட்டுக்கின்றன.

புதியது பழையவை