முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகவியலாளர்களிடம் மிகுந்த பணிவுடன் தம்மை விட்டுவிடுமாறு கோரும் காணொளியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபைக் கூட்டம் நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் நீடிப்பார் என தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கூட்டம் முடிந்து வெளியே வந்த முன்னாள் ஜனாதிபதியிடம் ஊடகவியலாளர்கள் சில கேள்விகளை எழுப்ப முயற்சித்தனர்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் குறித்த ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்துமாறு சட்ட மா அதிபருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இந்த விடயங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிலைப்பாட்டை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதியிடம் கேள்விகளை எழுப்ப முயற்சித்த போது “கடவுள் ஆசிர்வதிப்பாராக, என்னை செல்வதற்கு இடமளியுங்கள்” என தயவாக ஊடகவியலாளர்களிடம் கூறி அந்த இடத்தை விட்டு அகன்று சென்றுள்ளார்