பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி மூலமாக அரசுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கின்றது என்பது தான் இந்த விசாரணைகள் மூலம் நாங்கள் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது என வடக்கு, கிழக்கு சிவில் சமூகங்களின் சம்மேளன இணைத்தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தொடர்பில் நீதிமன்றக் கட்டளைகளை மீறிச் செயற்பட்டதாகத் தெரிவித்து நேற்றைய தினம் சிவயோகநாதனிடம் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன.
திருக்கோவில் மற்றும் மட்டக்களப்பு பொலிஸாரினால் இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதுடன் பேரணி தொடர்பில் பல்வேறு வினாக்கள் தொடுக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
தமிழ் பேசும் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வடக்கு, கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட இந்த போராட்டத்தில் கிழக்கு மாகாண இணைப்பாளராக எஸ்.சிவயோகநாதன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.