கடந்த ஒரு வார காலமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி குறித்து இராணுவ தளபதி சவேந்திர சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.
புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டே, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றதாக அவர் சாடியுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
“கடந்த சில நாட்களாக நடைபெற்ற இவ்வாறான போராட்டங்கள் ஒரு சில தரப்பினரின் குறுகிய நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், எரியும் தீயில் எண்ணையை ஊற்றுவது போல இந்த போராட்டம் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதால் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளை மீறியவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.