காத்தான்குடியில் பிரசவித்த சிசுவை மையவாடியில் புதைத்த சம்பவம்!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் சிசு ஒன்றை வீட்டில் பிரசவித்து சிசு இறந்துவிட்டதாக தெரிவித்து மையவாடியில் புதைத்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தொடுத்ததையடுத்து புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் இன்று நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளையின் தாயார் கருவுற்றுள்ள நிலையில் கடந்த இரண்டாம் திகதி சிசு ஒன்றை வீட்டில் பிரசவித்துள்ளார்.

பின்னர் சிசு இறந்து பிறந்துள்ளதாக அப்பகுதி பள்ளிவாசலுக்கு அறியப்படுத்தி சிசுவின் சடலத்தை பூநொச்சிமுனை மையவாடியில் புதைத்துள்ளனர்.

இதன்பின்னர் சிசுவைப் பிரசவித்த தாயார் சுகயீனம் காரணமாகத் தனியார் வைத்தியசாலையை நாடிய நிலையில் அந்த வைத்தியசாலை வைத்தியர் உடனடியாக நோயாளர் காவு வண்டியை வரவழைத்து போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக அவரை அனுப்பியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்ற தாயாருக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

இதனையடுத்து இன்று குறித்த மையவாடியில் புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எல்.எம்.றிஸ்வான் முன்னிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்தியர்களான வைத்தியர் சி.எஸ்.ஜலப்பெருமா, வைத்தியர் ஈ.டபிள்யூ.என்.ஈ.சாமிக்க, வைத்தியர் எஸ்.சிவகாந்தன் ஆகியோர் பார்வையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.





புதியது பழையவை