மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரை நல்லடக்கம்



battinatham.com

கொரோனா வைரஸ்தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை அடக்கம்செய்யும் நடவடிக்கை சுகாதார அமைச்சினால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நான்கு மணிவரையில் இரண்டு சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், முதலாவது சடலம் ஓட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் கொரோனா தொற்று மூலம் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று ஐந்து உடல்கள் அடக்கம்செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று முஸ்லிம்களின் ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்படவுள்ளன. இன்று ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த இரு சடலங்களும், காத்தான்குடியில் உள்ள மூன்று சடலங்களுமாக ஐந்து சடலங்கள் அடக்கம் செய்யப்படுகின்றன.

மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் காணிகளை அண்மித்த இடங்களில் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதிக்குச் செல்ல அனுமதி இல்லாதவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை குறித்த காணியில் அடக்கம் செய்வதற்காக குழிகள் தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், ஆறு அடி ஆழம், ஆறு அடி நீளம், மூன்று அடி அகலம் அளவில் குழிகள் தோண்டப்படுகின்றன.

இந்தப் பணிகளை, மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பிராந்திய பணிமணை அதிகாரிகள், இராணுவ உயரதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள், ஓட்டமாவடி பிரதேச செயலக அதிகாரிகள் நேரில் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





புதியது பழையவை