நாட்டு மக்கள் சாந்தியும் சமாதானமாகவும் நோய்நொடியின்றி வாழவேண்டி கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மந்திர ஹல்ப மகா யாகம் இன்று அதிகாலை ஆரம்பமானது.
மகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு ஐந்து தினங்கள் காலை மாலை நிகழ்வுகளாக இந்த யாகம் நடாத்தப்படவுள்ளது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்களின் தலைமையில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்துவருகைதந்த சிவாச்சாரியர்களின் மூலம் இந்த மந்திர ஹல்ப மகா யாகம் நடாத்தப்பட்டது.
தீர்த்தம்,மூர்த்தி,தலம் ஆகியனவற்றினை ஒருங்கே கொண்ட சிறப்புக்கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தக்குளத்தில் இருந்து நீர் எடுத்துவரப்பட்டு மூலமூர்த்திக்கு அபிசேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து மந்திர ஹல்ப மகா யாகம் ஆரம்பமானது.
இதன்போது மகா கணபதி ஹோமம் நடைபெற்று மூலமூர்த்திக்கு அபிசேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ஆலய முன்றிலில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரும் யாக குண்டத்தில் மந்திர ஹல்ப மகா யாகம் நடாத்தப்பட்டது.
மனித குலத்தின் நன்மைக்காக அகத்திய மாமுனியினால் இந்த யாகம் நடாத்தப்பட்டு நாட்டு மக்களுக்கு நன்மையளிக்கப்பட்டதாகவும் இந்த யாகத்தின் மூலம் நாட்டில் பீடித்து நிற்கும் நோய் பிணிகள் நீங்கி,சுபீட்சமான நிலை ஏற்படும் என்று இங்கு பிரதமகுருக்களினால் தெரிவிக்கப்பட்டது.
இன்று ஆரம்பமான இந்த மந்திர ஹல்ப மகா யாகம் தினமும் அதிகாலை 4.00மணிக்கும் மாலை 4.00மணிக்கும் தினமும் நடைபெற்று சிவராத்திரி தினத்தன்று நிறைவுபெறவுள்ளது.