அவதானி
அந்தக்காலத்தில் தமிழ் அரசர்களுக்கிடையே இருந்த பகைமைக்கு சற்றும் குறைவில்லாது புலவர்களிடையே உள்ள பகை .இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது ஒட்டக் கூத்தர் மற்றும் புகழேந்திப் புலவர்களுக்கி டையே இருந்த பனிப்போர்.
சோழ அரசன் ஒருவன் ஒட்டக் கூத்தனின் மாணவன். இவனது துணைவி (பட்டத்தரசி) புகழேந்தியின் மாணவி. ஒருநாள் அரசனுக்கும் துணைவியாருக்குமிடையில் சிறு ஊடல். அந்தப்புரத்தின் வாயிற் கதவைப் பூட்டி விட்டார் பட்டத்தரசி. தமிழின் மீது தீராப் பற்றுக்கொண்ட தனது துணைவியின் கோபத்தைக் குறைக்க என்ன செய்யலாம் எனச் சிந்தித்தான் அரசன். உடனே தனது தமிழ் ஆசான் ஒட்டக் கூத்தரை வரவழைத்து துணைவியாரின் கோபம் நீங்க ஒரு பாடல் (கவி) பாடுமாறு வேண்டினான். நினைத்தவுடனே கவிபாடுவது அந்தக் காலக் கவிஞர்களுக்கு ஜூஜிபி.
கவிஞர் பாடத் தொடங்கியதும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகிவிட்டது பட்டத்தரசிக்கு. ஏற்கெனவே ஒரு தாழ்ப்பாள் போட்டிருந்த அவர் இரண்டாவது தாழ்ப்பாளையும் போட்டார். உள்ளேயிருந்து கடும் சினத்துடன் சொன்னார் பட்டத்தரசி "ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் " .
புகழேந்தியின் மாணவிக்கு ஒட்டக் கூத்தரைக் கொண்டு கவி பாடச் சொன்னது தனது தவறுதான் இதை வெளியில் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவும் முடியாது என உணர்ந்தான் சோழ அரசன்.
அதன் பிறகு இரு தரப்பு விவகாரங்களில் சொதப்ப முனைவோருக்கு "ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் " என்று எச்சரிக்கும் பழக்கம் தமிழரிடையே பரவலாயிற்று.
***
காணிச் சீர்திருத்த ஆணையக யாழ் அலுவலகங்கள் அநுராதபுரத்துக்கு மாற்றப்படவிருப்பதாக பரவலாக செய்திகள் வெளியாகின.அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நடவடிக்கையினை தமிழ்த் தேசிய முன்னணியினர் மேற்கொண்டனர். இதற்கு வேறு கட்சிகள்,அமைப்புக்களின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாக செய்திகள் வெளியில் வரவில்லை. அப்படியேதும் நடந்து பெருமளவில் மக்கள் எதிர்ப்பு மிகப்பலமாக இருந்திருக்குமாயின் அரசு வேறு மாதிரிச் சிந்தித்திருக்கக்கூடும். பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை போராட்டத்தின் முடிவு சாணக்கியனைப் பற்றியே பேசவைத்தது. எனவே இப் போராட்டத்தினை தனியே முன்னெடுப்போம் என முன்னணி தீர்மானித்தது போலும்.
காரைநகர் கடற்படை முகாமை ஈ. பி .ஆர் .எல். எப் தாக்கியது. புலிகள் தான் தாக்குகிறார்கள் என நினைத்து பதுங்கு குழிக்குள் ஓடி ஒளிந்தனர் படையினர். அப்போது "நாங்கள் ஈ.பி. ஆர் .எல் .எப் வின் மக்கள் விடுதலைப் படை வந்துள்ளோம். அனைவரும் சரணடையுங்கள்" என ஒலி பெருக்கியில் அறிவித்தனர். வந்திருப்பது புலி இல்லை என்பது நிச்சயமானதுடன் வெளியில் வந்து பலமான எதிர்த்தாக்குதலை தொடுத்தனர் கடற்படையினர். மக்கள் விடுதலைப் படைக்கு கடும் இழப்பு குறிப்பிடத்தக்க தளபதிகளில் ஒருவரான சின்னவன்,பெண் உறுப்பினர் ஷோபா உட்பட பலரை இழந்தது மக்கள் விடுதலைப் படை இதனைப் போலத் தான் முன்னணியின் போராட்டத்தையடுத்து வடக்கு மாகாண ஆவணங்கள் அனைத்தையும் அநுராதபுரத்துக்கு அள்ளிச் சென்றுள்ளது அரசு.
ஒரு மாகாண ஆவணங்கள் இன்னொரு மாகாணத்திடம் இது வரை ஒப்படைக்கப்பட்டதாக தகவல் இல்லை. மாகாணத்தில் பதிவு செய்யப்படும் ஆவணங்கள் தலைமைப்பணிமனை என்ற வகையில் கொழும்பில் பதிவு செய்து உறுதிப்படுத்துவது வழமை .ஆனால் முழுக்க முழுக்க தமது அதிகாரத் திமிரை வெளிப்படுத்தவே அனுராதபுரத்துக்கு ஆவணங்களை அள்ளிச் சென்றமையை நோக்கலாம். வடக்கு அதிகாரிகள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர் என அரசு உணர்த்த முனைகிறதா ?மக்களை அனுராதபுரத்துக்கு அழைக்கழிப்பதால் ஒரு குரூர திருப்தியே கிடைக்கும். இனி வரும் தேர்தல்களில் எப்படி நடக்க வேண்டும் என குறிப்பால் உணர்த்த முனைகிறதா அரசு ? யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் எடுக்கபட்ட முடிவுக்கு மாறாகவே இராணுவத்தீர்மானம் போலவே அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.
„***
சரி! தமிழ்த் தேசிய முன்னணி என்ன செய்யப்போகிறது? ஆவணங்களை திரும்ப ஒப்படை என்று அநுராதபுரத்துக்கு ஊர்வலம் போகப் போகிறார்களா ? அக் கட்சியில் மிகத் துணிச்சலானவர்கள் உள்ளனர். 40 ஆயிரம் படையினரையும் சவப்பெட்டியில் அனுப்புவோம் என்று வீரமுழக்கமிட்ட செல்வராஜா கஜேந்திரன் இந்த ஆவண மீட்பு போராட்டத்தை முன்னெடுப்பாரா ?எமது உடல்களைத் தாண்டித்தான் யாழ் கோட்டைக்குள் படையினர் உட்புக முடியும் என சவால் விடுத்த சட்டத்தரணி சுகாஸ் இருக்கிறார்.இந்த இரட்டைக்குழல் துப்பாக்கியின் நடவடிக்கை தமிழ் மக்களின் அலைச்சலை போக்கடிக்கும் ஒரு நிலைமையை உருவாக்குமா ?
யாழ்ப்பாண மாநகர சபையைக் கவிழ்ப்பதை விட உருப்படியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. வெற்றிக்கனியைப் பறிக்குமா? வழக்கம்போல் சொதப்புமா முன்னணி ?