தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இந்த நாட்டில் எமக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பில் நியாயத்தை கேட்டு நிற்கின்ற வேளையில், சர்வதேச விசாரணையை நடத்தக்கோரி நிற்கின்ற நிலையில், சர்வதேச விசாரணை அவசியமில்லை, உள்ளக விசாரணைகளில் தீர்வு காண்போம் எனக் கூறியவர்கள் இப்போது இந்த விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கேட்கின்றனர்.
ஏன் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது? ஏனென்றால் பொறுப்புக்கூறலை நிறைவேற்றவும், தமது மக்களுக்கான நியாயத்தை, நீதியை நிலைநாட்டவும் இலங்கை அரசாங்கம் தோற்றுவிட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.
எமது மக்களுக்கு பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்பட வேண்டும் என நாம் தொடர்ச்சியாக பதினோரு ஆண்டுகள் கேட்டுக்கொண்டுள்ளோம்.
2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆரம்பித்த எமது கோரிக்கை இன்றுவரை தொடர்கின்றது. இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர் குற்றங்களை ஆராயவும் பொறுப்புக்கூறவும் வலியுறுத்துகின்றோம்.
ஆனால் இன்றுவரை எமது குரலுக்கு நீதி கிடைக்கவில்லை. எனினும் கிறிஸ்தவ மக்களின் நியாயத்தை பெற்றுக்கொள்ள உள்ளக விசாரணைகளில் முடியாது போயுள்ள இரண்டு ஆண்டுகளில் சர்வதேச விசாரணையை கேட்டுவிட்டனர்.
நாம் 11 ஆண்டுகளாக காத்துக்கொண்டுள்ளோம். அப்படி இருக்கையில் எமது கோரிக்கை நியாயமில்லை என கூற எவருக்கும் இப்போது தகுதியில்லாது போய்விட்டது.
இதுவே மக்களுக்கான பொறுப்புகூறலில் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது என தெரிவிக்கின்றோம்.
இந்த விடயத்தில் உங்களின் மதத் தலைவரே சர்வதேச விசாரணையை கேட்டுள்ளார், இதனை நாம் நிச்சயமாக வரவேற்போம். பேராயருக்கு நாம் ஆதரவை வழங்குவோம்,
அதேபோல் தான் நாமும் எமக்கு நியாயம் வேண்டும் என தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டுள்ளோம்.
2009 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை அதனையே கேட்டுநிற்கின்றோம் என்றார்
