இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கிழக்கு ஆளுநர் அனுராதா யாஹம்பத்தினை சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பு திருகோணமலையில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது, கிழக்கு மாகாண மக்கள் நலன் சார்பாகவும் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்ட பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய வெளிநாட்டு முதலீடுகள் குறித்து பேசப்பட்டது.
பல நாட்களாக இழுபறியிலுள்ள மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தினை நடத்தி மக்களுக்கு உரிய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு இதன்போது, ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டதற்கமைய, சட்டவிரோத மண் அகழ்வு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இன்னும் முடிவில்லாமல் இழுபறியில் இருக்கும் நிலையில், விசேட குழுவொன்றை உடனடியாக அமைத்து பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சில சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கான சில கலந்துரையாடல்களும் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.