போலி தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது



 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பொன்றை மேற்கொண்டு, போலி தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

வெடிப்பொருட்களுடனான வாகனமொன்றில் வருகைத் தரும் சிலர், தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக கடந்த 18ம் திகதி பிற்பகல் 2.45 அளவில், 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பொன்று வந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த 25 வயதான யுவதியொருவர், தனது 28 வயதாக சகோதரியின் தொலைபேசியை பயன்படுத்தி, இந்த அழைப்பை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், குறித்த 2 யுவதிகளும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு, மாரவில நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட யுவதியை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொலைபேசி உரிமையாளரான குறித்த யுவதியின் சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
புதியது பழையவை