சாணக்கியன் தாக்குப்பிடிப்பாரா??




அரசியலில் விநாடிக்கு விநாடி மாறிக்கொண்டே இருக்கும் இந்த சூழ்நிலையில், மட்டக்களப்பில் ஏன் கிழக்கு மாகாணத்திலே தமிழரசு கட்சியின் நிலை நான் சொல்லித்தான் அறிய வேண்டியதில்லை. குறிப்பிட்ட ஆண்டிற்கு பின்னர் பிறந்த இளைஞர் யுவதிகள் கணிசமான அளவு தமிழரசு கட்சியுடன் இல்லாமல் வேறு கட்சிகளில் அங்கத்துவர்களாக இருக்கின்றனர்.

 அதற்காக வேண்டி கட்டாயம் தமிழரசு கட்சியில் தான் இருக்க வேண்டும் என்றும் கூறவில்லை.  விரும்பிய அரசியல் கட்சிகளில் அங்கத்துவம் பெறுவதென்பது அவர்களின் ஜனநாயக உரிமை.

தமிழரசு கட்சி என்பதை விட தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று அதாளபாதளத்திற்கு சென்றுள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் கட்சி உறுப்பினர்கள் தான். இதை யாரும் மறுதலிக்க முடியாது. தேர்தல் காலத்தில் அனைவரும் கத்தரிக்கோலுடன் தான் திரிந்தார்கள். காரணம் பதவி என்னும் மூன்றெழுத்து. தமிழரசு கட்சியின் கிளைகள் தேர்தல் காலத்தில் தமிழரசு கட்சிக்காக ஈடுபட்டதா என்று கேட்டால் இல்லை என்ற விடை தான் வரும். காரணம் ஓய்வெடுக்க வேண்டியவர்கள் பதவியில் இருந்தால் கட்சி தானாக ஓய்வெடுக்க முயன்றுள்ளது என்பதைத்தான் கடந்த பாராளுமன்ற தேர்தல் பெறுபேறுகள் எடுத்தியம்பியுள்ளது. அடுத்த தேர்தலிலும் இது நீடிக்குமாக இருந்தால் கட்சி நீள்துயில் கொள்ளும். தந்தை செல்வாவின் கூற்றுப்படி 'கடவுள்தான் காப்பாற்ற வேணும்' என்பது மாறி கடவுளாலும் காப்பாற்ற முடியாமல் போகும்.

இனி சம்பவங்களுக்கு வருவோம். நான் பட்டிருப்பு தொகுதியை சேர்ந்தவன். அதிலும் போரதீவுப்பற்று பிரதேசத்தில் வாழ்பவன். இங்கு பட்டிருப்பு தொகுதி கிளை அதன் கீழ் மூன்று பிரதேச கிளைகள். இந்த தமிழரசு கட்சி கிளைகள் யாருடைய வெற்றிக்காக தங்களை அர்ப்பணித்தார்கள் என்று தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்ய வேண்டும். பழுகாமத்தில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்கு போரதீவுப்பற்று கிளைக்கு முடியாமல் தான் போய்விட்டது. பட்டிருப்பு தொகுதி தமிழரசு கிளையின் பதவியில் உள்ளவர்கள் யாரின் வெற்றிக்காக உழைத்தார்கள் என்று உங்களுக்குள்ளேயே நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

வேறு கட்சிக்காரன் சொல்கின்ற வாசகங்களை தொகுதி மற்றும் கிளைகளில் உள்ள பதவியில் உள்ள உறுப்பினர்களே பிரச்சாரங்களில் கூறினார்கள் என்றால் இவர்கள் கட்சிக்காக உழைப்பவர்களா? இல்லை தங்களின் பதவிக்காக விலை போனார்களா? என்று அவர்களை தாங்களே பரிட்சித்து தான் பார்க்க வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கப்பட வேண்டும். இன்று இலங்கை நாடே பிரமித்து பார்க்குமளவிற்கு கிழக்கு அரசியலில் பாரிய வெற்றிடம் ஒன்று நிரப்பப்ட்டுள்ளது. துடிப்புள்ள ஆளுமை கொண்ட, மும்மொழி ஆற்றல் கொண்ட 30 வயது நிரம்பிய இளைஞர் சாணக்கியன் கிடைத்திருப்பது மட்டக்களப்பு மக்கள் மட்டுமன்றி தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் தான்.

சாணக்கியன் செய்ய வேண்டிய முதலாவது காரியம் தமிழரசு கட்சியின் அனைத்து தொகுதி கிளை மற்றும் பிரதேச கிளைகள் அனைத்தையும் புனநிர்மாணம் செய்ய வேண்டும். அவ்விடங்களுக்கு கட்சியின் மூத்தோர்களின் வழிநடத்தலில் இளைஞர் சமுதாயத்திடம் கையளிக்க வேண்டும். இல்லாவிடின் கட்சி ஓய்வெடுக்கும் நிலை உருவாகும். அவ்விடங்களுக்கு வரும் இஞைர்களும் பதவியினை எதிர்பார்த்து செயற்படுபவர்காளக இருக்ககூடாது. அவர்களுக்கு ஒரு அடிமட்ட தொண்டன் என்ற எண்ணப்பாடே அடிமனதில் இருக்க வேண்டும்.

கௌரவ சாணக்கியன் தமிழரசு கட்சியினை கட்டியெழுப்ப வேண்டிய கட்டாய கடமைக்குள் தள்ளப்பட்டுள்ளார். இன்றைய நிலையில் சாணக்கியனுக்கு இளைய சமுதாயத்தை ஒன்றிணைத்து கட்சியை மேன்நிலை கொண்டுவருவது  இலகுவான விடயமாக இருந்தாலும், கட்சிகளை கட்டிக்காத்த என்று கூறுபவர்களும்,  பதவிக்கு அலையும் நபர்களால் தான் பாரிய சவால் உருவாகும். 

தற்பொழுதும் கூட மாகாண சபைக்கான ஆயத்தப்படுத்தல்களில் ஓய்வெடுக்க வேண்டிய ஓய்வூதிய காரர்கள் இருக்க நேரமில்லாமல் ஓடித்திரிகிகன்றமையை முகநூல்களில் காணலாம்.

அனைத்தும் கட்சியின் நலனுக்காகவே....
புதியது பழையவை