கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு தேற்றாத்தீவு, அருள்மிகு ஸ்ரீ கொம்புச்சந்திப்பிளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் 17-04-2021 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இலங்கையில் உயரமான 64பிள்ளையார் சிலையினை இராஜகோபுரமாக கொண்ட தேற்றாத்தீவு,கொம்புச்சந்திப்பிளையார் ஆலயமானது நீண்ட வரலாற்றினைக்கொண்ட ஆலயமாக திகழ்ந்துவருகின்றது.சுமார் 500வருடங்களுக்கு முற்பட்ட இந்த ஆலயமானது கதிர்காமத்துடன் நெருங்கிய தொடர்புகளைக்கொண்ட ஆலயமாக இருந்துவருவதாகவும் ஆலயத்தின் வரலாற்றில் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தனை சிறப்புக்கொண்ட ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு இன்று சனிக்கிழமை காலை மாங்காடுமாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடியேற்றத்துக்கான கொடிசீலை எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.அதனை தொடர்ந்து ஆலயத்தின் விசேட யாகம் மற்றும் மூலமூர்த்திக்கு அபிசேகம் ஆராதனை நடைபெற்று,கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் விநாயகருக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டு ஊர்வலமாக கொடிச்சீலை கொண்டுவரப்பட்டு கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.
இதன்போது நாத,வேத இசையுடன் பக்தர்களின் ஆரோகரா கோசத்திற்கு மத்தியில் பூமலை பொழிய கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.ஆலயத்தின் பிரதமகுரு கிரியாக கலாபூசணம் சிவஸ்ரீ மோஹனாநந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் கொடியேற்றம் மஹோற்சவம் நடாத்தப்பட்டது.கொடியேற்றத்தினை தொடர்ந்து தம்பத்திற்கு விசேட அபிசேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து சுவாமி வீதியுலா நடைபெற்றது.பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் தினமும் சுவாமி ஸ்நபன அபிஷேகம்,தம்ப அபிஷேகம்,மூலமூர்த்தி அலங்கரபூஜை, தம்ப அபிஷேகம்,வசந்த மண்டப அலங்காரபூஜையும் சுவாமி உள்வீதி வெளி வீதி வருதலுடன் புஸ்பாஞ்சலி நடைபெறும்.
எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாம்பழத்திருவிழாவும்,24ஆம் திகதி சனிக்கிழமை வேட்டைத்திருவிழாவும் 25 ஞாயிற்றுக்கிழமை சப்பரத்திருவிழாவும் 26.04. 2021 திங்கட்கிழமை காலை நடைபெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் மஹோற்சவம் நிறைவுபெறவுள்ளது.