மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கல்லுச்சூழை சரிந்து விழுந்து சூழையின் உரிமையாளர் உயிரிழந்த சம்பவமொன்று இன்று 28.05.2021 ம் திகதி மட்டக்களப்பு பாலாமடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.பன்குடாவெளி- பாலர்சேனை பகுதியைச்சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய முத்தன் தர்மராசா என்பவரே பலியானவர்.
மிக நீண்டகாலமாக செங்கல் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டுவந்த இவர் அதிகாலை வேளையில் சூழையை சீர் செய்துகொண்டிருந்தபோது ஆறு அடுக்கு கற்கள் சரிந்து இவர் மீது விழுந்துள்ளன.
இதனால் தலையில் காயமடைந்த இவர் செங்கலடியிலுள்ள தனியார் வைத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
அதிலிருந்து சற்றுநேரத்தில் நெஞ்சுப்பகுதியில் வலியேற்பட்டுள்ளது. இதையடுத்து செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிலமணிநேரத்தில் மரணமடைந்தார்.
திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தார்.
இதன்பின்னர் சடலம் பீசீஆர் மற்றும் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.