கிளிநொச்சியில் ஒரு மனிதப்பேரவலத்தினைத் தடுப்பதற்காக இந்த அவசர வேண்டுகோளை விடுப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
2010-2015 ஆண்டு காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் வறுமையில் வாடிய குடும்பங்களுக்கு ஆதரவினை வழங்கும் நோக்குடன் தொழிற்சாலைகள் நிறுவப்படுவதை மக்கள் ஊக்குவித்திருந்தார்கள். அதற்கமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் அறிவியல் நகரில் நிறுவப்பட்ட தொழிற்சாலைகள் வறுமையைக் குறைப்பதில் பிரதான பங்கு வகிக்கின்றன.
இருப்பினும் தற்போது இந்தத் தொழிற்சாலைகளே கிளிநொச்சி மாவட்டத்தின் தொலைதூரக் கிராமங்களுக்கு கொரோனா தொற்றைப் பரப்பும் மையங்களாக மாறியுள்ளன.சுகாதாரத்துறையினரிடமிருந்து நம்பகமான தகவல்களின்படி பத்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களில் ஒருவர் என்ற வீதத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருகின்றனர்.
இதுவரை 50ற்கும் மேற்பட்ட ஆடைத்தொழிற்சாலைப் பணியாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அறிவியல் நகரில் உள்ள உணவு பதனிடும் தொழிற்சாலையில் எழுந்தமானமாக 15 பணியாளர்கள் பரிசோதிக்கப்பட்டதில் 05 பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கு நோய் காணப்படும் வீதம் 33 ஆக அதி உயர்மட்டத்தில் உள்ளது. இந்தத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பணியாளர்கள் வசிக்கும் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தற்போதைய நிலை குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். ஏனெனில் இவர்களில் அனேகமானவர்கள் நாட்கூலி வேலைகளில் ஈடுபடுபவர்கள். ஆகவேதான் கொரோனா தமது கிராமங்களில் பரவி அதனால் கிராமங்கள் முடக்கப்பட்டால் தமது நாளாந்த வருமானம் இழக்கப்படும் என்று அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
அதனாலேயே தமது கிராமங்களிலிருந்து பணியாளர்கள் தொழிற்சாலைகளுக்குச் செல்வதை கிராமத்தவர்கள் தடுக்க முற்படுகிறார்கள். எனவே, அதிகாரிகள் இந்த விடயத்தில் தலையிட்டு அனைத்து தொழிற்சாலைப் பணியாளர்களையும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி தொற்றுக்கு உள்ளானவர்களைத் தனிமைப்படுத்தி, சகல தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக 14 நாட்களுக்கு மூடிவிடும்படி கேட்டுக்கொள்கின்றனர்.