நாடும், முழு உலகமும் கொரோனா எனும் கொடிய வைரஸ் தொற்றிலிருந்து விடுபட வேண்டும்


நாடும், முழு உலகமும் கொரோனா எனும் கொடிய வைரஸ் தொற்றிலிருந்து விடுபட வேண்டும் என பிரார்த்தித்து சகல வணக்கஸ்தலங்களிலும் இன்று 08-05-2021ம் திகதி மாலை 5.46 மணிக்கு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
இதேநேரம் பஞ்ச ஈஸ்வரங்களிலும் ஆலயங்களிலும் விசேடமாக மஹா மிருத்யுஞ்சய ஹோமம் நடத்தப்பட்டது.

இதற்கமைவாக வரலாற்று சிறப்புமிகு அக்கரைப்பற்று ஸ்ரீ பெரிய பிள்ளையார் ஆலயத்திலும் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தலைமையில் விசேட மஹா மிருத்யுஞ்சய ஹோமம் நடத்தப்பட்டது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவுக்கமைய மேற்கொள்ளப்பட்ட இப்பூஜை வழிபாடுகளை தத்புருஷ சிவாச்சாரியார் பிரதிஷ்டா கலாநிதி சண்முகவசந்தன் குருக்கள் நடாத்தி வைத்ததுடன் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜ் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் நிசாந்தினி தேவராஜ் உள்ளிட்ட சிலர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.

இதேநேரம் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலில் இருந்தவாறே பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நமது நாட்டை விட்டும் உலகத்தை விட்டும் கொரோனா நீங்க வேண்டும்மென்றும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் சுகமடைய வேண்டும், சகலரும் வளமான வாழ்க்கையப் பெறவேண்டும் என்று இறைவனை மனதார ஒருமித்துப் பிரார்த்திக்குமாறு, சமய கிரியைகள், புத்தசாசன மத விவகார அமைச்சின் இந்து சமய விவகார இணைப்பாளரும் சர்வமத இந்து பீட செயலாளருமான கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை