உண்மையான ஒரு மனிதன் இறைவனை மனித நேயத்தில் கண்ட ஒரு முஸ்லீம் காவல் அதிகாரி!



ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் இயங்கும் மனிதாபிமான பொலிஸ் சார்ஜன்ட்.

தன் கடமைக்கு அப்பால் சென்று  உதவிய பொலிஸ் சாரஜன்ட் AM.ஜமால்தீனை
(PS -64688) வாழ்த்துகிறேன்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவு கோரகள்ளிமடு, பறங்கியாமடு பிரதேசத்தில் பிள்ளையார் கோயில் வீதியில் வாழும் அடிமட்ட வறிய குடும்பம்.

திருமணமாகி முதலாவது ஆண்  குழந்தை 22-09-2018 அன்று அறுவைச்சிகிச்சை மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிடைக்கிறது.

பிறக்கும் போது எதுவித நோய் அறிகுறிகளுமில்லாத ஜெமினிதாசன் ஜெமிசன் என்ற இக்குழந்தை ,
ஒருவருடத்துக்கு முன்னர் இரத்தச்சோகை எனும் தலிசீமியா நோய்க்குள்ளாகியதால், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மூன்று மாதங்களுக்கொருமுறை சென்று குருதி ஏற்றுதல் செய்து வந்தனர்.

தனது குடும்ப வறுமை காரணமாக கடந்த ஆறு மாதகாலமாக குழந்தைக்கு குருதி ஏற்ற  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லக்கூட  முடியாதிருந்துள்ளார்.

குழந்தைக்கு தலிசீமியா நோய் ஏற்பட்டபோது தாய்க்கும் குழந்தைக்கும் ஆறுதல் அளிக்கவேண்டிய  கணவன், அவர்களை தன்னந்தனியே விட்டுவிட்டு தலைமறைவாகி இன்றுவரை வீடுதிரும்பவில்லை.

 இதனால் தாயையும் 
குழந்தையையும், தாயின் தந்தையான கூலித்தொழிலாளியான இராமநாதன் என்பவரே வறுமைக்கு மத்தியில் கவனித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் சென்ற 06-05-2021 அன்று, தலிசீமியா நோயாளியான குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, குழந்தையை அண்மையிலுள்ள (சுமார் 04 Km) சந்திவெளி வைத்தியசாலைக்கு வாகனத்தில் கொண்டு செல்லக்கூட வசதியில்லாத நிலையில், குழந்தையை தாய் தனது  தோலில் சுமந்தவாறு கொண்டுவரும்போது, கொழுத்தும் வெயிலில் குழந்தை குடிப்பதற்கு தண்ணீர் கேட்க,
தாயும் பாசத்தோடு குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க மீண்டும்  மூச்சுத்திணறல் அதிகரித்ததால் ஓட்டமும் நடையுமாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது குழந்தையின் உயிர் பிரிந்திருந்த சோகம் நடந்தேறியுள்ளது.

குழந்தை மரணித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால் 
மரண விசாரணையின் பின்னரே பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க முடியுமென்பதால்,
கௌரவ நீதிபதியின் கட்டளைக்கமைவாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு மரண விசாரணைக்காக மரண விசாரணை அதிகாரி ஏறாவூர் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் AM ஜமால்தீனும் சென்றார்கள்

மரணவிசாரணை முடிந்து பிரேதத்தை தாயிடம் ஒப்படைத்துவிட்டு வீடுதிரும்ப இருக்கையில் மாலை 06.00 மணி.

நோன்பு திறப்பதற்கு சார்ஜன்ட்  ஜமால்தீனும் ஏறாவூர் செல்ல இருந்த வேளை  பிரேதத்தை வீட்டுக்கு  எடுத்துச்செல்ல அத்தாய் அலைந்த அலைச்சலை கண்டதும் நோன்புதிறக்க போவதைவிட பிரேதத்தை பறங்கியாமடுக்கு எடுத்துச்செல்ல உதவவேண்டுமென்ற உணர்வே அவர்களுக்கு மேலோங்கியிருந்த நிலையில்,
பிரேதத்தை ஏற்றிச்செல்ல எந்தவொரு வாகனச் சொந்தக்காரர்களும் முன்வரவில்லை.

இதனால் கவலையடைந்த பொலிஸ் சார்ஜன்ட் ஜமால்தீன், நோன்பு திறக்கும் நேரத்தையும் கவனத்திலெடுக்காது 
பிரேதம் தாயின் மடியிலிருக்க, 
தனது மோட்டார் சைக்கிளில்  ஏற்றிக்கொண்டு அவர்களது வீட்டுக்கே கொண்டுபோய் ஒப்படைத்துவிட்டு திரும்பியது உண்மையில் மனநெகிழ்வை ஏற்படுத்தியது.



புதியது பழையவை