மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் மாட்டுப்பட்டியில் இருந்த மாடுகளைத் திருடி ஜீப் வாகனத்தில் காத்தான்குடி பிரதேசத்திற்கு கடத்திச் சென்ற 3 பேர் மற்றும் ஜீப் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று 06-05-2021 ம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசந்த அப்புகாமி தலமையில் சப் இன்பெக்டர் குணவர்த்தன, சி.லோஜிதன், வை.தினேஸ், ஜெயசுந்தர, சதுரங்க, வலையிறவுபால பொலிஸ் வீதிச் சோதனைச்சாவடியை அண்மித்த பகுதில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் இக் கைது இடம் பெற்றுள்ளது.
இதன் போது ஜீப் வாகனம் ஒன்று வலையிறவு பாலத்தை நோக்கி பிரயாணித்த நிலையில் பொலிசாரினால் சோதனையிட்ட போது வவுணதீவு பிரதேசத்திலிலுள் மாட்டு பட்டியில் உள்ள 06 மாடுகளை திருடி காத்தான்குடி பிரதேசத்துக்கு எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காத்தான்குடியைச் சேர்ந்த 03 பேரை கைது செய்ததுடன் குறித்த வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
கைதானவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வவுணதீவு பிரதேசத்தில் உள்ள மாட்டுப்பட்டியில் இருந்து அண்மைக்காலமாக 20 மாடுகள் திருட்டுப்போயுள்ளதாகவும் மாடுகளுக்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் 03 மாத கலத்திற்கு மாடுகளை விற்பதற்கும் இறைச்சிக்கு வெட்டுவதற்கும் வவுணதீவு கால்நடைகள் சுகாதார வைத்தியர் தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.