விடுதலையான 16 பேரில் ஒருவர் கூட கிழக்கில் இல்லை


1978ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டம் ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாகும்.அச்சட்டத்தை முழுமையாக நீக்கவேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) வேண்டுகோள்விடுத்துள்ளார்.

கடந்த ஒரு தசாப்தகாலத்திற்கு மேலாக இலங்கை தமிழர்தரப்பில் பேசுபொருளாகவிருந்துவந்த தமிழ்அரசியல்கைதிகளின் விடுதலை விவகாரம் கடந்தவாரம் ஒரு முக்கிய கட்டத்தையடைந்துள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனா சமகால நிலைவரம் தொடர்பில் கருத்துரைத்தார்.

உண்மையில் பயங்கரவாதத்தை ஒடுக்கவேண்டும் தமிழர்போராட்டத்தை நசுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இச்சட்டமானது எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. மாறாக போராட்டம் வீரியமடைந்ததே வரலாறு.

மக்கள் குறிப்பாக சிறுபான்மையினர் அரசுக்கெதிராக கிளர்ந்தெழ முடியாது வாய்திறக்கக்கூடாதென்பதே அவர்களது எதிர்பார்ப்பாகவிருந்தது. அதனை ஒரு ஜனநாயக விரோத செயற்பாடு என ஜரோப்பிய ஒன்றியமும் தெரிவித்துள்ளது.

இதனைத்தான் நாங்களும் கடந்தகாலங்களில் கூறிவந்திருக்கிறோம்.இத்தடைச்சட்டத்தை நீக்கி நாட்டில் நிரந்தர அரசியல்தீர்வை கொண்டுவாருங்கள்.அப்போது நாட்டில் குழப்பமும் வராது போராட்டமும் இருக்காது.

தமிழ்அரசியல்கைதிகள் விடுதலை!

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை நிறுத்தப்படுமென்ற அழுத்தம் இன்று தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்யவைத்திருக்கின்றது.ஜனாதிபதியினால் பொசோனன்று விடுதலைசெய்யப்பட்ட 16பேரில் ஒருவராவது கிழக்கைச்சேர்ந்தவர் இல்லை என்பது கவலைக்குரியவிடயம்.

அண்மையில் முள்ளிவாய்யக்கால் நினைவேந்தல் சம்பவத்தில் மட்டக்களப்பு கிரானைச்சேர்ந்த 10பேர் கைதுசெய்யப்பட்டு இதே சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல் முகநூலில் தவறாக பதிவிட்டார்கள் என்றபெயரிலும் பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.இவர்களெல்லாம் விடுதலை செய்யப்படவேண்டும்.

எது எவ்வாறெனினும் ஜனாதிபதியின் செயற்பாட்டை நாம் வரவேற்கிறோம். அமைச்சர் நாமல்ராஜபக்சவிற்கும் நன்றிகள். இந்த 16 பேர் மட்டுமல்ல அனைத்து தமிழ்அரசியல்கைதிகளும் விடுதலைசெய்யப்படவேண்டும் அதற்கு அமைச்சர் நாமலும் ஜனாதிபதியும் அடுத்தபொசோன் வரைக்கும் காத்திராது விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார்.
புதியது பழையவை