மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றிலிருந்து சுகாதார திணைக்களத்தினை சேர்ந்த உத்தியோகத்தர்கள் மட்டுமே தமது அடையாள அட்டையினை காட்டி பயணிக்கமுடியும் எனவும் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் அடையாள அட்டையுடன் திணைக்கள தலைவரின் அனுமதிக்கடிதமும் இருக்கும்போதே பயணிக்கமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
இன்று 14-06-2021ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட கொவிட் செயலணியின் கூட்டம் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கொவிட் செயலணிக்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகள்,பொலிஸ் உயரதிகாரிகள் திணைக்களங்களின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட கொவிட் செயலணியின் கூட்டத்தில் விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டு ஊடகங்கள் ஊடாக மாவட்ட அரசாங்க அதிபரினால் அறிவிக்கப்பட்டது.
ஓட்டமாவடி,ஏறாவூர் பகுதிகளில் அண்மையில் தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் பொதுமக்கள் விழிப்புக்குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு போதுமானளவு பொலிஸார் இல்லையென்ற கருத்து குறித்த பகுதிகளின் பிரதேச செயலாளர்களினால் முன்வைக்கப்பட்டது.இதன்போது அப்பகுதிக்கு மேலதிக பொலிஸாரை அனுப்புவதற்கு மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்தார்.இவர்கள் அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுவதுடன் வீதிகளில் தேவையற்று பயணிப்போருக்கு எச்சரிக்கை விடுப்பதுடன் தேவையேற்படின் அவர்களை கைதுசெய்யவும் நடவடிக்கையெடுப்பார்கள்.
வீதிகளில் அதிகளவான மரக்கறி வியாபாரிகளும் மீன்வியாபாரிகளும் பழ வியாபாரிகளும் வீதிகளில் பொருட்களை விற்பனை செய்வதாக ஜனாதிபதியினால் கொவிட் செயலணிக்கு நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் கொஸ்வத அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.
இது தொடர்பில் அந்தந்த பகுதி உள்ளுராட்சிமன்ற தலைவர்களினால் நடவடிக்கையெடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
அவ்வாறானவர்களை நாளை தொடக்கம் கைதுசெய்தற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.வீதிகளில் வியாபாரம் செய்வதை உடனடியாக நிறுத்தி அந்த பொருட்களை நடமாடும் சேவையாக விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் என்ற போர்வையில் பலர் அலுவலக அடையாள அட்டையினைக்காட்டி வீதிகளுக்கு வருவதாக பொலிஸார்,இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றிலிருந்து சுகாதார திணைக்களத்தினை சேர்ந்த உத்தியோகத்தர்கள் மட்டுமே தமது அடையாள அட்டையினை காட்டி பயணிக்கமுடியும் எனவும் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் பயணிப்பதாயின் திணைக்கள அடையாள அட்டையுடன் திணைக்கள தலைவரின் பயணத்தடை காலத்தில் அலுவலகத்தில் அவசியமாக தேவைனெ கடிதமும் அனுமதிக்கடிதத்துடன் செல்லும்போதே பாதுகாப்பு பிரிவினர் அவர்களை தொடர்ந்து பயணிப்பதற்கு அனுமதிப்பார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகின்றது.இதனை கட்டுப்படுத்துவதற்கு சில இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இன்றிலிருந்து பயணத்தடையினை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.