ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் ஒருவர் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் உரையாடியுள்ளார்.
இதன்போது இருதரப்புச் சந்திப்புக்களை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபயவிற்கும், சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த போதும் அது பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஒருவர் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு சம்பந்தனுடன் உரையாடியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறிதொரு தினத்தில் சந்திப்பை நடத்துவதற்கே எண்ணங்கொண்டிருப்பதாகவும் அதற்கான திகதியை விரைவில் அறிவிப்பார் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
அத்துடன், முதலாவது சந்திப்பு தவிர்க்க முடியாத காரணங்களால் இடம்பெறவிலலை என்றும் அதனையிட்டு எதிர்மறையாக கருதவேண்டாம் என்றும் குறித்த இணைப்பாளர் சம்பந்தனை கேட்டுக்கொண்டதாக தெரியவருகின்றது.