பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் உழைக்கும் பணத்தில் ஒரு பகுதியை தாயக மக்களின் நலன்களுக்காக செலவிடும் புலம்பெயர் சொந்தங்களுக்கு தலை வணங்குவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
புலம்பெயர் உறவுகளின் இந்த சேவை தொடர வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் வாழ்ந்து வரும் விதவைப் பெண்ணான நிரவியறாஜ் சிவபாக்கியவதிக்கு இத்தாலி மனிதநேய சங்கத்தால் நிரந்தர வீடொன்று நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டை கையளிக்கும் நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உப தவிசாளர் க.ஜெனமேஜெயந் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம். புதியகுடியிருப்பு பகுதியில் கணவனை இழந்த நிலையில் பெண் பிள்ளை ஒருவருடன் வாழ்ந்து வருகின்றார் நிரவியறாஜ். சிவபாய்க்கியவதி.
தனது பிள்ளையுடன் தற்காலிக கூடாரத்தில் அல்லல்ப்பட்ட தாய்க்கு இத்தாலி மனிதநேய சங்கத்தால் புதிய நிரந்தர வீடு ஒன்று அமைத்து கையளிக்கப்பட்டுள்ளது.