ஜனாதிபதி கோட்டாபயவுக்கு பறந்தது கடிதம்


இலங்கை கடற்பரப்பில் எம்.வி எக்ஸ் - பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர்கள் சங்கம் இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இது தொடர்பில் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பிரதான செயலாளர் தெரிவித்தார்.

இந்த கப்பலில் ஏற்பட்ட விபத்து பற்றி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசேட குழுவொன்று நேற்றைய தினம் கப்பலுக்கு அருகே சென்று பார்வையிட்டிருந்தது.

10 பேர் அடங்கிய குழுவே இவ்வாறு விஜயம் செய்திருந்ததோடு, இதுவரை 13 பேரிடம் வாக்குமூலத்தையும் பதிவு செய்திருக்கின்றது.

இதேவேளை, எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலின் தீவிபத்தை அடுத்து கடலில் கலந்த பிளாஸ்டிக் மற்றும் இரசாயனப் பொருட்கள் என கரையொதுங்கிய 300 டொன் கழிவுகள் இதுவரை சேகரிக்கப்பட்டிருப்பதாக விமானப்படை தெரிவிக்கின்றது.

அதேபோல, கொழும்பு துறைமுகத்திற்கு அருகே தீக்கிரையாகி, தற்போது கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல், இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த விதம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளும்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த முழுமையான விசாரணையொன்றுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிடுமாறு குறிப்பிட்டு உச்சநீதிமன்றில் நேற்றைய தினத்தில் அடிப்படைய உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுற்றாடல் நீதிக்கான கேந்திர மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஹேமந்த விதானகே மற்றும் மீனவர்கள் சிலரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் கைத்தொழில் மற்றும் துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹெவா, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை, கடல்வள பாதுகாப்பு அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் நாரா நிறுவனம் என்பவற்றை மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக கடலில் இரசாயன திரவியங்கள் கலக்கப் பெற்றுள்ளதால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், இதனால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் கடற்றொழில் துறைக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பட்டுள்ள மனுதாரர்கள், அதன்காரணமாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதியது பழையவை