இலங்கையின் சமுத்திர சூழலைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்


இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கையின் சமுத்திர சூழலைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.
உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


அபிவிருத்தி மற்றும் தொழில் மயமாக்கல் போன்ற மனித நடவடிக்கைகளின் தாக்கம் காரணமாக தற்போது கடல் மாசுபாடு அதிகரித்துள்ளதாக, சூழலியல் நிபுணர்களின் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிரினங்களின் உயிர் வாழ்விற்கு நேரடியாக பங்களிக்கும் சமுத்திர சூழல் பல்வேறு மனித நடவடிக்கைகளால் மாசுபடுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கப்பல்கள் மூழ்குதல் மற்றும் அவை விபத்திற்குள்ளாதல் என்பன சமுத்திர மாசுபாட்டிற்கு நேரடி தாக்கம் செலுத்துவதாகவும், பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மையில் கொழும்பை அண்மித்த கடற்பரப்பில் விபத்திற்குள்ளான கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பை, இழப்பீட்டின் மூலம் மதிப்பிட முடியாது எனவும், பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இதன் மூலம் நாட்டின் கடற்கரைகள், கடல்வாழ் உயிரினங்கள், கடல் பல்லுயிர் பெருக்கம் மற்றும் மீன்பிடி சமூகத்தின் மீதான தாக்கம் என்பவற்றை அளவிட முடியாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் கழிவுகள் கடலில் சேர்க்கப்படுவது குறித்து கவனம் செலுத்திய அரசாங்கம், இந்த ஆண்டு திடக்கழிவு முகாமைத்துவம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ‘வாழ்க்கையும் வாழ்வாதாரமும் சமுத்திரமே’ எனும் உலக சமுத்திர தின தொனிப்பொருளின் மூலம் சமுத்திரமும் அதனை சார்ந்த அனைத்து மதிப்புகளையும் நினைவு கூர்வதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை