வறுமையும், குடும்பச் சூழலும் சாதனைக்குத் தடையல்ல என்பதை மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மாணவன் பசிகரன் சர்ஜன் மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.
அண்மையில் வெளியான 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, விஞ்ஞானப் பிரிவில் தோற்றிய இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று மருத்துவத் துறைக்குத் தெரிவாகியுள்ளார்.
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்ற சர்ஜன், உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில்,2-ம் இடம்
அகில இலங்கை ரீதியில், 48-வது இடம்
பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
கோட்டைக்கல்லாறு கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பசிகரன் - வளர்மதி தம்பதியினரின் புதல்வரான சர்ஜன், சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். வறுமையின் பிடியில் சிக்கியிருந்த போதிலும், அவரது தாய் வளர்மதி அவர்கள் தனது மகனின் கல்வியை இடைநிறுத்தவில்லை.
வீதியோரத்தில் அப்பம் சுட்டு விற்று, அதில் கிடைத்த மிகச் சிறிய வருமானத்தைக் கொண்டு மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் மகனைப் படிக்க வைத்துள்ளார்.
தாயின் உழைப்பும், மகனின் தளராத விடாமுயற்சியுமே இன்று அவரை ஒரு மருத்துவராக உயர்த்தியுள்ளது.
தனது ஆரம்பக் கல்வியை கோட்டைக்கல்லாறு கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலயத்தில் கற்ற சர்ஜன், பின்னர் உயர்கல்விக்காக கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் இணைந்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
உதவிக்கரம் நீட்டுமா சமூகம்?
தற்போது ஓந்தாச்சிமடம் கிராமத்தில் வசித்து வரும் சர்ஜன், வறுமை நிலையைத் தாண்டி மருத்துவப் படிப்பிற்குத் தெரிவாகியுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் அவரது மருத்துவக் கல்வியை எவ்விதத் தடையுமின்றித் தொடர, சமூக ஆர்வலர்களும் கொடையாளிகளும் முன்வந்து உதவ வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.