மக்கள் தங்கள் உயிர்களுக்காக போராடும் நேரத்தில் மன்னார் மருத்துவமனை ஊழியர்கள் முன்வைத்த 14 அம்ச கோரிக்கைகள் நியாயமும் உண்மையுமானவை என தெரிவித்து வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எல்லோரும் பயத்தில் வாழும் இந்த யுகத்தில் இந்த ஊழியர்கள் தங்கள் வாழ்க்கையை துட்சமென மதித்து இந்த நேரத்தில் தங்கள் வாழ்க்கையை பார்க்காமல் வேலை செய்கிறார்கள். அவர்களின் சுயதியாக சேவை நோக்கு நிலை இன்று பல உயிர்களை காப்பாற்றுகிறது.
அவர்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறை இருப்பதை நான் நன்கு அறிவேன். அது அவ்வாறு இருக்கும் பொழுது அவற்றை கருத்தில் கொள்ளாது அவர்கள் வேலை செய்கிறார்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன்.
அவர்களின் வேலை இந்த நாளிலும் சூழலிலும் மிகவும் அவசியமான ஒன்றாகும். இங்கே சுகாதாரத் துறையில் பணியாற்றுவோரின் நலன் மிக முக்கியமானது மற்றும் அவசியமானதுமாகும். எனவே 14 அம்ச கோரிக்கை நடத்தப்பட்ட போராட்டத்தை கருத்தில் கொண்டு ஒரு நியாயமான தீர்வை வழங்க அவர்கள் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் ஊழியர்களின் பற்றாக்குறை குறித்து கூடுதல் கவனம் செலுத்துவதற்கும் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் உங்களை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன் என அக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்