இலங்கையின் தெஹிவளை தேசிய மிருக காட்சிச்சாலையில் வாழும் சிங்கம் ஒன்று கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பீசீஆர் பரிசோதனையில் உறுதியாகியுள்ளதென மிருக காட்சிசாலையில் மிகவும் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2012ஆம் ஆண்டு தென்கொரியாவில் உள்ள தேசிய மிருக காட்சிச்சாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட தோர் எனப்படும் ஆண் சிங்கமே இவ்வாறு கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக இருமல் மற்றும் தொண்டை வலியினால் பாதிக்கப்பட்ட இந்த சிங்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பேராதனை கால்நடை பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சிங்கத்தின் சளி மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை சிங்கத்தின் கூட்டிற்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பாளர்கள் இருவர் தங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சிங்கம் சுகயீனமடைந்த நாட்களில் மிருக காட்சிச்சாலையில் வாழ்ந்த ஸீப்ரா குட்டியும் ஹிப்போடெமஸ் என்ற மிருகமும் திடீரென உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அந்த மிருகங்களுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பில் வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவிடம் வினவிய போது, மிருக காட்சிச்சாலையில் சிங்கம் ஒன்று சுகயீனமடைந்துள்ளதாக தகவல் கிடைத்தது. எனினும் பீசீஆர் பரிசோதனை முடிவுகளில் சிக்கல் இருக்கலாம் என்பதனால் இந்தியாவுடன் கதைத்து சரியான பரிசோதனைகள் முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.