மட்டக்களப்பில் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளன.
இறுதிக் கிரியைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சட்டத்தரணியுமான சுகாஷ் பங்கேற்றதுடன், சம்பவம் நடைபெற்ற பின்னர் குறித்த இளைஞரின் வீட்டிற்கு சென்று உறவினர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உயிரிழந்தவரின் தங்கை கூறுகையில்,
எனது அண்ணனை பொலிஸார் அடித்துக் கொன்றதை நான் என் கண் முன்னே பார்த்தேன். எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுவரைக்கு நான் சும்மா விடமாட்டன்.
அண்ணனை தூக்கி போட்டு குத்தினார்கள். சுவரில் சாற்றி அடித்தார்கள். சுவர் உடைந்து போய் உள்ளது. இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. மருத்துவ உடல் கூற்று அறிக்கையில் எனக்கு சந்தேகம் உள்ளது.
எனவே அதற்கான சரியான நீதி கிடைக்க வேண்டும். கைவிலங்கிட்ட எனது அண்ணன் ஐஸ் போதைப்பொருளை எவ்வாறு விழுங்குவான். இவர்கள் அனைத்தையும் மூடி மறைக்க பார்க்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட 21 வயது மதிக்கத்தக்க சந்திரன் விதுஷன் என்ற இளைஞர் 4 ஐஸ் போதைப் பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில், குறித்த நபர் 4 பக்கட்டுக்களை கொண்ட ஐஸ் போதைப்பொருளை வாயில் போட்டு விழுங்கிய நிலையில் நெஞ்சுப் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.