காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(05) 1600 நாட்களை எட்டியுள்ளது.
இதையொட்டி அவர்களால் போராட்டம் நடத்தப்படும் இடத்துக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் கொடிகளை ஏந்தியிருந்தனர்.
“காணாமல்போன எங்கள் உறவுகள் எங்கே? காணாமல்போன எங்கள் உறவுகளுக்கு சர்வதேச சமூகமே நீதியைப் பெற்றுத்தா” என்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலியுறுத்தினர்.
இதன்போது அவர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளான நாங்கள், பொறுப்பு மற்றும் நீதியைக் காண கடந்த 1600 நாட்களாக, ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத் தவிர்ப்பு என்று தொடர்ந்து போராடி வருகின்றோம்.
தற்போது நாட்டுக்குள் வந்துள்ள சீனா, ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் தமிழர்களுக்கான நீதியை எதிர்க்கின்றது. இதனால் சீனாவை எமது நிலத்தை விட்டு வெளியேறுமாறு கேட்கின்றோம்.
மனித உரிமைகளில் அக்கறைகொண்ட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையில் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தத் தாமதிக்காமல் செயற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்” – என்றனர்.