தாதியர்களின் 5 கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி உடனடித் தீர்வு


பொதுச்சேவை ஐக்கிய தாதியர் சங்கம் கோரிய ஏழு கோரிக்கைகளில் ஐந்தில் உடனடி தீர்வுகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார்.

மீதமுள்ள இரண்டு கோரிக்கைகளுக்கு அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி ஒப்புக்கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் பொதுச் சேவை ஐக்கிய தாதியர் சங்கத்துடன் விசேட கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இந்த முடிவுகளை எடுத்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
01) தாதியர் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல்
02) நல்லாட்சி அரசின் காலத்தில் 2017.12.07ஆம் திகதிய 32/2017ஆம் இலக்க சுற்றறிக்கை ஊடாக இடைநிறுத்தப்பட்ட பணிக்குழாம் நிலையை மீண்டும் வழங்குதல்
03) இடைநிறுத்தப்பட்டுள்ள வகுப்பு iii இலிருந்து வகுப்பு ii இற்கு பதவி உயர்வை ஐந்தாண்டுகளிலும் மற்றும் வகுப்பு ii இலிருந்து வகுப்பு iக்கு ஏழு ஆண்டுகளிலும் தரம் உயர்த்துதல்

04) ரூ .20,000 வருடாந்த சீருடைக் கொடுப்பனவை வழங்குதல்
05) தற்போதைய 36 மணிநேர வேலை நேரத்தை வாரத்துக்கு ஐந்து நாட்கள் (30 மணிநேரம்) நேரமாகக் கருதுவதை விசேட குழுவொன்றின் ஆய்வுக்கு உட்படுத்தல்
ஆகிய ஐந்து விடயங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

ரூ .10,000 கொடுப்பனவு மற்றும் 2014.12.24 ஆம் திகதியன்று நிதி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை சம்பளத்தின் 1/100 மேலதிக சேவைக் கொடுப்பனவு ஆகியவற்றை எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்க, ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.

அதன்படி, பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கம் சமர்ப்பித்த அனைத்து திட்டங்களும் ஜனாதிபதியால் தீர்க்கப்பட்டன.
சுகாதாரத் துறையில் அரசுக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும், தாதிய சேவைக்கு அதிக அங்கீகாரம் அளிப்பதாகவும், தாதிய வல்லுநர்களுக்கு உரிய இடத்தை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
புதியது பழையவை