மட்டு-களுவாஞ்சிகுடியில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுப்பு


மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று 09-07-2021ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதாரப்பணிமனையின் சுகாதாரவைத்திய அதிகாரிடொக்டர் எஸ்.இராஜேந்திரன் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் குடும்பநலஉத்தியோகத்தர்கள் தடுப்பூசி ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கல்வி அமைச்சினால் எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் வகையில் முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.

இதற்கமைய பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென் எருவில் பற்றுகல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் சுமார் 1200 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனையில் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இங்குள்ள ஆசிரியர்கள் ஆர்வமுடன் முன்வந்து தடுப்பூசியினை பெற்றுக் கொண்டனர். பிரதேசத்தில் கடந்த நான்கு நாட்களாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், ஆசிரியர்களுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கும் கட்டம் கட்டமாக தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை