இலங்கை கடற்படையினரால் கடலில் இறக்கப்பட்ட பழைய பேருந்துகளில் அகப்பட்டு தமது வலைகள் அழிவடைந்தமையால் 14 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது எனத் தமிழக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இராமேஸ்வரத்திலிருந்து நேற்றுமுன்தினம் 472 விசைப்படகுகளில் சுமார் 1500 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை அரசால் அப்பகுதியில் பயனற்ற பேருந்துகள் போடப்பட்டிருப்பதால் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்களின் மீன்பிடி வலைகள் பேருந்துகளில் மாட்டி அறுந்து கடலுடன் சென்றுள்ளன. இதனால் படகு ஒன்றுக்கு தலா 2 இலட்சம் ரூபா இழப்பீடு ஏற்பட்டுள்ளது எனக் கரை திரும்பிய மீனவர் எடிசன் தெரிவித்துள்ளார்.
“டீசல் விலை உயர்வு, மீன் விலை வீழ்ச்சி மற்றும் இலங்கை கடற்படை பிரச்சினைக்கு மத்தியில் தற்போது தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என இலங்கை அரசு திட்டம் போட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
அதை இந்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது” என்று குற்றம் சுமத்திய தமிழக மீனவர்கள், உடனடியாகக் கடலில் போட்ட பேருந்துகளை எடுப்பதற்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று தமிழக செய்திகள் தெரிவித்தன.