இலங்கையில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 15 வயதான சிறுமியை பாலியல் சுரண்டலை நோக்காக கொண்டு இணைய வழியாக விற்பனை செய்த சம்பவம் தொடர்பான வழக்கில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
ஸ்ரீலங்கா காவல்துறையின் கொழும்பு நகர சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரால் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பின் புறநகரான கல்கிஸை பகுதியில் 15 வயதான சிறுமியை இணைய வழியாக விற்பனை செய்தமை மற்றும் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த விசாரணைகளின் அடிப்படையில் இதுவரை சுமார் 40 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சிலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசியில் உள்ள தரவுகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் காவல்துறை அதிகாரி மற்றும் முன்னாள் வங்கியின் முகாமையாளர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இருவரையும் கொழும்பு பிரதம நீதவான் முன், முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மூன்று மாதங்களாக குறித்த சிறுமி, பாலியல் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளதுடன், பல்வேறு தரப்பினருக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், மிஹிந்தலே பிரதேச சபையின் பிரதி தவிசாளர், வாகன ஓட்டுநர்கள், விளம்பரத்தை வடிவமைத்தவர், கப்பலின் கப்டன், கப்பல் பணியாளர்கள், இரத்தினக்கல் வியாபாரிகள், விளம்பரத்தை வெளியிட்ட இணையத்தளங்களின் நான்கு உரிமையாளர்கள், மாலைதீவின் முன்னாள் அமைச்சர் மொஹமட் அஷ்மாலி, சிறுமியை பாலியல் சுரண்டலுக்காக பயன்படுத்திய ஹோட்டலின் முகாமையாளர், ஸ்ரீலங்கா கடற்படையின் இதயநோயியல் நிபுணர் உள்ளிட்ட 37 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிறுமியின் தாய், மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதி தவிசாளர், கடற்படையைச் சேர்ந்த இதய நோயியல் நிபுணர், மற்றும் இரண்டு முன்னணி வியாபாரிகள் உள்ளிட்ட சிலருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிணை வழங்கியிருந்தார்.
அத்துடன் சிறுமி பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களையும் தராதரம் பாராது கைது செய்யுமாறு மேலதிக நீதவான் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.