மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 65 தொற்றாளர்கள் அடையாளம்

கொரோனா தொற்றினால் கிழக்கு மாகாணத்தில் ஆக கூடிய மரணமாக இதுவரை 100 மரணங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் 6 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று(11) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து 22 பேரும், மட்டக்களப்பு சுகாதைர வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து 24 பேரும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் 3 பேரும்
சிறைச்சாலை கைதிகள் 3 பேரும், கோறளைப்பற்று மத்தி, பட்டிப்பளை, ஏறாவூர் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் 3 பேர் உட்பட 65 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து மாவட்டத்தில் இதுவரை 7199 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் 100 மரணங்கள் ஏற்பட்டுள்ளது.

கொரோனா 3வது அலையில் 6214 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதுடன் 91 பேர் மரணமடைந்துள்ளதுடன் கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் இருந்து 4995 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதுடன் தொடர்ந்தும் 1060 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர் என தெரிவித்தார்.
புதியது பழையவை