முழுமையாக மாற்றியமைக்கப்படவுள்ளதா அமைச்சரவை?

எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்குள் அமைச்சரவையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கவனம் செலுத்தி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

நாடு மீண்டும் முற்றாக திறக்கப்படும் காலத்தில் ஜனாதிபதியின் சௌபாக்கிய நோக்கு திட்டத்தின் கீழ் மிக வேகமான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடிய நபர்களை நியமிப்பது ஜனாதிபதியின் தேவையாக இருப்பதாக கூறப்படுகிறது.

அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆதரவு குறைந்துள்ளமை மாத்திரமின்றி, சில அமைச்சுக்களின் பலவீனமான செயற்பாடுகள் காரணமாக மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஒரு வருட காலத்திற்குள் போதுமான செயற்திறனை காண்பிக்காத சில சிரேஷ்ட அமைச்சர்கள் பதவிகளை இழக்கலாம் எனவும், மேலும் சிலரது துறைகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் எனவும், திறமைகளை காண்பித்துள்ள இளம் ராஜாங்க அமைச்சர்கள் சிலருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவிகள் வழங்கப்பட இருப்பதாகவும் பேசப்படுகிறது.

அத்துடன் இந்த அமைச்சரவை மாற்றமானது, அமைச்சர் நாமல் ராஜபக்சவை பிரதமர் பதவியில் நியமிக்கும் முதல் கட்ட நடவடிக்கையாக இருக்கும் எனவும் அரசியல் வட்டாரங்களின் தகவல்கள் கூறுகின்றன.

அமைச்சர் நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்கும் திட்டங்கள் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.
ஒரு வருடகாலத்திற்குள் நாமல் ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் புதிய நிலைமைகளுக்கு அமைய மிக குறைந்த காலத்திற்குள் இது நடக்கலாம் எனவும் அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே மகிந்த ராஜபக்ச, நிதியமைச்சு பதவியை கைவிட இணங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை