வவுனியாவில் கொடுக்கல் வாங்கல் பிணக்கின் காரணமாக குடும்பஸ்தர் ஒருவரை வான் ஒன்றில் கடத்த மேற்கொண்ட முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச் சம்பவம் நேற்று (18) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள குடும்பஸ்தர் ஒருவர் யாழில் உள்ள ஒருவரிடம் ஒரு தொகைப் பணத்தை கடனாக பெற்றிருந்தார்.
குறித்த பணம் இது வரை செலுத்தப்படவில்லை. இந்நிலையில் குறித்த குடும்பஸ்தர் தனது மனைவி, பிள்ளைகளுடன் வவுனியா நகர் நோக்கி காலை முச்சக்கர வண்டியில் சென்றிருந்தார்.
மேலும் இதன்போது, வவுனியா, இலுப்பையடிச் சந்தியில் குறித்த குடும்பஸ்தரை வழிமறித்த சில நபர்கள் அவரது மனைவியையும், பிள்ளையையும் அவ்விடத்தில் விட்டு விட்டு வெள்ளை வானில் ஒன்றில் குடும்பஸ்தரை ஏற்றிச் சென்றனர்.
இதன்போது வாகன இலக்கத்தை குறித்துக் கொண்ட மனைவி வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்தார். அத்தோடு விரைந்து செயற்பட்ட வவுனியா பொலிஸார் குறித்த வானையும், குடும்பஸ்தரையும், வானில் இருந்த ஆறு பேரையும் வவுனியா வெளிக்குளம் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்திருந்தனர்.
இதனையடுத்து வவுனியா பொலிசுக்கு வாகனம் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கொடுக்கல் வாங்கல் பிணக்கின் காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.