ஈழத்தின் கானல் நீர் -இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானம் எதற்கு?


பகவான் சிங் – தமிழகம்

கடந்த சில நாட்களாக என் மனதில் இரு விவகாரங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றை என் ஈழ நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

தமிழ் தேசியவாதிகளும் அரசியல் தலைவர்களும் கலந்துகொண்ட ஒரு ‘சூம்’ கூட்டத்தில் ‘இரண்டாவது வட்டுகுக் கோட்டை தீர்மானம்’ ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஓகஸ்ட் முதலாம் திகதி நடந்த இந்தக் கூட்டத்தில், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்களின் சுயநிர்ணய உரிமைக்காக இந்தியா தலையிடவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது. பெரும்பாலும் எல்லா முக்கியமான ஈழ அரசியல் தலைவர்களும், கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பைக் கண்டுகொள்ளவில்லை. சிலர், இந்தியாவிடம் கோரிக்கை வைப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்கள். வேறு சிலரோ, 1976இல் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம் சரியானதாக இருந்தும், அதுவே இன்னும் நிறைவேற்றப்படாத சூழலில் இன்னொரு தீர்மானம் எதற்கு என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். வேறு சிலரோ, இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா குறுக்கிடுவதற்கான ஒரு முயற்சியாகத்தான் இந்த சூம் சந்திப்பு நடக்கிறது என்று தீர்மானமாகக் கூறினார்கள்.

 சமீபகாலமாக இலங்கை மீதான தன்னுடைய அதிகாரம் கைநழுவிப் போவதாலும், அது சீனாவின் பிடிக்குள் வருவதுபோலத் தோன்றுவதாலும், இந்தியாவே இதை முன்னின்று நடத்துகிறது என்று சிலர் கூறினார்கள்.
சந்திப்பில் இருந்த பெரும்பாலானோர் இந்தியர்கள். யார் பங்குபற்றினார்கள், யார் பங்குபற்றவில்லை என்ற விவரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை, அது, ஏற்கனவே பொதுத்தளங்களில் கிடைக்கிறது. ஆனால், இலங்கையிலிருந்து சிவாஜிலிங்கம், வேலன் சுவாமிகள், அனந்தி சசிதரன் ஆகிய மூவர் மட்டுமே பங்கேற்றார்கள். 

அதோடு ஒப்பிடும்போது, தமிழ்நாட்டிலிருந்து பலர் பங்கெடுத்திருந்தார்கள். கவிஞர் காசி ஆனந்தனின் முயற்சியால் இது நடந்திருக்கலாம். அவர் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராமு மணிவண்ணன் மாநாட்டை ஒருங்கிணைத்திருந்தார்.
சிட்னியிலிருந்து இனிய நண்பர் பாலசிங்கம் பிரபாகரன் பல மாதங்களுக்குப் பிறகு திடீரென போன் செய்தார். அவர்தான் இந்த சூம் மாநாடுபற்றி என்னிடம் கூறினார். அதோடு, அவருடைய ‘தமிழுணர்வு’ யூரியூப் வீடியோ தொகுப்பையும் அனுப்பினார். அதில், இந்த சூம் மாநாட்டை நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் புறக்கணித்தார் என்ற குற்றச்சாட்டு அடங்கியிருந்தது. தன் யூரியூப் ஷோவில் பேசும் பிரபாகரன், இந்த மாநாட்டுக்குத் தன்னை யாரும் அழைக்கவில்லை என்று சீமான் கூறுவது உண்மையல்ல என்று தெரிவிக்கிறார். கூட்டத்தின் சில பேச்சாளர்கள் தனக்குப் பிடிக்காதவர்கள் என்பதால், அவர் மாநாட்டில் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது.

சில எண்ணங்கள் உதிக்கின்றன. தமிழர்கள் இருக்கும் வடக்குப் பகுதி, தமிழ்நாட்டுக்கு அருகில் இருக்கும் தீவுகள் உட்பட, இலங்கையில் பரவிவரும் சீன ஆதிக்கத்துக்கு எதிராக, இலங்கை விவகாரங்களில் உள்ளே நுழைய டெல்லியின் ஆசீர்வாதத்தோடு காசி ஆனந்தன் எடுத்த முயற்சிதான் இந்த மாநாடு என்று சில நிபுணர்கள் சொல்கிறார்கள். அது உண்மையாக இருக்குமா?

 இதைக் குறிப்பிடுபவர்கள் பலரும், முன்பு விடுதலைப் புலிகளின் பொலிட் பீரோ உறுப்பினராக இருந்த காசி ஆனந்தன், இப்போது பல ஆண்டுகளாக சென்னையின் புறநகரில் அமைதியாக இருக்கிறார் என்றும், டெல்லியின் அனுமதியின்றி அவர் இதை செய்திருக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். ஒருவேளை இது இந்தியாவால் துவங்கப்பட்ட விவகாரமாக இல்லாவிட்டாலும், இந்தியா இதற்கு அனுமதி வழங்கியிருக்கலாம் என்கிறார்கள்;
அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்த முயற்சி கைகூடவில்லை என்றே சொல்லவேண்டும். இலங்கையின் முக்கிய தமிழ்த் தலைவர்களை இந்தியாவால் பங்கேற்கச் செய்யமுடியவில்லை. புலிக் கவிஞரின் சூம் மாநாட்டுக்கு டெல்லி ஆதரவு அளிக்கவில்லை என்றாலும்கூட, இணையத்தில் இவ்வாறு ஒரு கூடுகை நடந்தது இந்திய புலனாய்வுத் துறைக்குத் தெரிந்திருக்கவேண்டும். முக்கிய ஈழத் தலைவர்கள் பங்கேற்கவில்லை எனும்போது, அவர்கள் இந்த முயற்சி வெற்றிபெற எதாவது செய்திருப்பார்கள். இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தம் தேச ஒற்றுமையை வலியுறுத்துகிறது. ஆகவே, பிரித்தாளுவதற்கான கோரிக்கையை முன்வைக்கும் எந்தக் கூட்டத்திலும் பங்கேற்க முடியாது என்று முக்கிய தலைவர்கள் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

ஆனால், ஒரு கசப்பான உண்மை என்னவென்றால், எந்த முக்கியமான விவகாரமாக இருந்தாலும், ஈழத்தமிழர்கள் ஒன்றுகூட மாட்டார்கள். துப்பாக்கி முனையில் ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட சமுதாயத்தை புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நடைமுறைப்படுத்தினார்.

 கடைசியாக அப்போதுதான் தமிழர் ஒற்றுமை மேலோங்கியிருந்தது.
சில வருடங்களுக்கு முன்னால் ஊடகப் பணிகளுக்காக நான் அவுஸ்திரேலியா சென்றிருந்தேன். வேலைகள் முடிந்தபின்பு மெல்போர்னைச் சேர்ந்த இவான்ஹோ பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியினர் வீட்டில் ஓரிரு நாட்கள் தங்க நேரிட்டது. நண்பர் மகேசன் எனக்கு ஊர் சுற்றிக் காட்டினார். சிவா-விஷ்ணு கோவிலில் வழிபட்டோம். இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்களின் ஒன்றுபட்ட கூட்டு முயற்சியால் இது கட்டப்பட்டது என்று அவர் தெரிவித்தார். “1980களில் இது ஒரு மரத்தடியில் இருந்தது. தமிழர்கள் பணம் திரட்டி இந்தப் பெரிய கோவிலைக் கட்டினார்கள். பிறகு, அறங்காவலர் குழுவுக்குள் பூசல் ஏற்பட்டது. ஒரு குழு பிரிந்துபோய் விநாயகர் கோவில் ஒன்றைக் கட்டியது. இரண்டாவது குழுவால் ஒரு முருகன் கோவில் உருவானது. இதன்பிறகு ஒரு சண்டையிலிருந்து, குன்றத்து முருகனும் எழுந்தார். இங்கு இருக்கும் கோவில்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே பெரும்பாலும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்தியில் உள்ள பூசல் குழுக்களின் எண்ணிக்கை தெரிந்துவிடும்” என்றார்.

மற்ற நாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்களின் கோவில்களுடைய வரலாறும் இதுபோன்றதுதான். புத்திசாலிகளான இந்த மக்கள், கடினமாக உழைக்கிறார்கள். தங்கள் மரபு மற்றும் பாரம்பரியத்தின்மீது உற்சாகத்தோடு இருக்கிறார்கள். ஆனால், அந்த அளவுக்கு அவர்கள் ஒற்றுமையை நாடுவதில்லை. “எனக்குதான் தலைமை வேண்டும் என்று கேட்பதில் பிரச்னையில்லை. ஆனால், நான்தான்அறிவாளி, மற்றவர்களை முட்டாள்கள் என்று சொல்லிவிடுகிறார்கள்” என்று கசப்புடன் கூறினார் மூத்த தமிழ்த் தலைவர் ஒருவர்.

ஈழப்போர் முடிந்த பிறகு சென்னையின் சவேரா ஹோட்டலில் நடந்த ஒரு மாநாடு நினைவுக்கு வருகிறது. 1983இல் தமிழ்நாட்டுக்கு அகதிகள் வரத்தொடங்கியதிலிருந்து நான் ஈழப் பிரச்சனையைப் பற்றி எழுதிவருகிறேன், மே 2009இல் நடந்த முள்ளிவாய்க்கால் துயரத்தை நேரில் கண்டு விரிவாக எழுதியவன் என்ற முறையில் நானும் பேச அழைக்கப்பட்டிருந்தேன். அன்று நட்சத்திரப் பேச்சாளராக உரையாற்றிய ஓர் அமெரிக்க வழக்கறிஞர் சொன்ன வார்த்தைகளை என்னால் மறக்க முடியவில்லை. “இந்த அறையில் ஐந்து தமிழர்கள் இருந்தால், அவர்களுக்குள் ஏழு தனித்தனிக் கட்சிகள் இருக்கும்” என்று, ஒற்றுமையின்மையை அவர் சுட்டிக் காட்டினார்.

கோரமான அந்தப் போருக்குப் பிறகு புலம்பெயர் நண்பர்களுக்கு நான் மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். ஈழ அரசியலில் உத்வேகத்தோடு இருக்கும் அவர்கள், தேசிய மற்றும் அடுத்தநிலை தமிழ் குழுக்கள், அமைப்புகள் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். பிரபாகரன் இருந்தவரை தமிழ்க்குரல் வலுவாக ஒலித்தது என்றும், அவர் இல்லாததால் புலம்பெயர் மக்கள் அந்த இடத்தை நிரப்பி, ஓர் ஒன்றுபட்ட தமிழ்க்குரலை உருவாக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினேன். 

போரின் வெற்றிக் களிப்பில் இருக்கும் ராஜபக்ஷகளை சமாளிக்கும் அளவுக்கு இங்கு தமிழ்த் தலைமை வலுவாக இல்லை என்றும், தமிழ் உரிமைகளை நிலைநாட்டவும் இது அவசியம் என்று சொன்னேன். அதை அவர்கள் உடனே ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், அதன்பிறகு ஒன்றும் நடக்கவில்லை. குழு பூசல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
அங்கும், இங்கும், எங்கும் மாநாடுகளையும் போராட்டங்களையும் நடத்துவதில் அவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால், ஒருங்கிணைந்த உலகக் கூட்டமைப்பு ஒன்றை அமைப்பது என்ற முக்கிய வேலையில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதுபோன்ற மாநாடுகள் நம் ஒற்றுமையின்மையை வெளிப்படுத்துகின்றன.

 முக்கியமான முடிவுகளும் கிடைப்பதில்லை, இவற்றால் என்ன நன்மை விளைந்துவிடும்?
இதுபோன்ற ஓர் உலகளாவிய கூட்டமைப்பு அமைக்கப்படும்வரை ஐ. நா. அமைப்புகளோ ஊடகங்களோ, ஆதிக்கம் உள்ள உலக நாடுகளின் அரசுகளோ ஈழத் தமிழர்களையும் அவர்கள் பிரச்னைகளையும் பொருட்டாக மதிக்கமாட்டார்கள். இது நம் ‘தலைவர்களுக்கு’ தெரியவில்லையா? இதுபோன்ற ஒரு கூட்டமைப்பு அமைக்கப்பட்டால், அது ஈழத் தமிழர்களுக்கும் நம்பிக்கை தரும். போரால் எல்லாவற்றையும் இழந்து, போருக்குப் பின் இப்போதைய அரசிடமிருந்தும் எதுவும் கிடைக்காமல் இருக்கிறார்கள் அவர்கள். இதைத் தலைவர்கள் உணரவில்லையா?

இலங்கைத் தமிழர்களிடையேயும் புலம்பெயர் தமிழர்களிடையேயும் உள்ள இத்தனை பிரிவுகளுக்கு மத்தியில், சீன ஆதிக்கத்தைக் குறைப்பது, டெல்லியின்மூலம் அழுத்தம் கொடுத்து ராஜபக்ஷவிடம் தமிழர் கோரிக்கைகளை நிறைவேற்றச் சொல்வது போன்ற தன் எண்ணங்களுக்கு, ஓர் ஒன்றுபட்ட குரலாகத் தமிழர்கள் துணைநிற்பார்கள் என்று எப்படி இந்தியா எதிர்பார்க்கிறது?

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்: அந்த தொப்புள்கொடி உறவைப் பாதுகாப்பதற்காக மட்டுமே ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற இந்தியா சிரமப்படாது. டெல்லியில் உள்ள தலைவர்களிடம் இந்த உணர்வுபூர்வமான வரலாறெல்லாம் எடுபடாது. இன்னொருபக்கம், சீனாவின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்கு ஒரு பக்கபலமாக இந்தியா ஈழத்தமிழர்களின் ஆதரவைப் பெற நினைக்கிறது. அப்படி ஒரு பக்கபலமாகத் தெரியவேண்டும் என்றால், ஈழத்தமிழர்களுக்கான ஒன்றுபட்ட சமூக-அரசியல் தளம் ஒன்று வேண்டும். குறைந்தபட்சம் பிளவுகளாவது பெருமளவில் குறைக்கப்படவேண்டும்.
ஒற்றுமையைப்பற்றி நிறைய நேரம் பேசிவிட்டேன். இந்த வாரத்துக்கான இரண்டாவது விஷயத்தையும் மடை திறந்ததுபோல் சொல்லிவிடுகிறேன்.

 ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரின் விடுதலைபற்றி மீண்டும் பேச்சு எழுந்திருக்கிறது. சில அரசியல் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் இதுபற்றிப் பேசுகிறார்கள், மாநில அரசும் முயற்சி எடுக்கிறது. ஏற்கனவே சிறையில் அவர்கள் 27 ஆண்டுகளைக் கழித்துவிட்டதால் அவர்களை விரைவில் விடுவிக்குமாறு முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அரசின் அமைச்சரவை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் 2018 செப்டம்பரில் பரிந்துரை செய்தது. இதுபற்றி இரண்டு ஆண்டுகள் பரிசீலித்தபின், ஆளுநர் முடிவெடுக்கும் பொறுப்பை குடியரசுத் தலைவருக்குத் தள்ளிவிட்டார். சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் தேர்தல் சூழலை மாற்றியமைக்கவேண்டாம் என்று அவர் நினைத்திருக்கலாம். அப்போதிலிருந்து அந்தக் கோப்பு ராஷ்டிரபதி பவனில் தூங்கிக்கொண்டிருக்கிறது.
ஆனால், குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்குப் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. ஓகஸ்ட் மூன்றாம் திகதி, ஹரியானா மாநிலம் பற்றிய ஒரு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 14 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த ஆயுள் கைதிகளை விடுவிக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு எனவும், இதுபற்றிய அமைச்சரவையின் பரிந்துரை வந்தால் ஆளுநர் அதை உடனே பரிசீலிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 

ஆகவே, உடனடியாக ஓர் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, இதுபற்றிய பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்புமாறு முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் பாமக தலைவர் எஸ். ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் உரிமை செயற்பாட்டாளர்களும் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.
இந்த ஏழு பேரின் வாழ்வில் நடந்திருக்கும் மனித உரிமை மீறலுக்கு முடிவு கட்டும் வண்ணம் முதல்வர் உடனே முடிவு எடுப்பாரா என்பதைப் பொறுத்துதான் பார்க்கவேண்டும். பேரறிவாளன் குற்றமற்றவர் என்று என்னால் அடித்து சொல்லமுடியும். சிவராசன் இவரிடம் வாங்கச் சொன்ன 9 வோல்ட் பட்டரி மனித வெடிகுண்டை இயக்குவதற்கானது என்றும், படுகொலையை இவர் முன்பே அறிந்திருந்தார் என்றும் சிபிஐ குற்றம் சாட்டியதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
இதைப்பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பேசலாம், குண்டுவெடிப்பை நேரில் பார்த்தவன் நான்.

-பகவான் சிங் – தமிழகம்
புதியது பழையவை