சிறுமி ஹிசாலி முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதின் வீட்டில் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் 50வது அமர்வு நேற்று மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
வழமையான சம்பிரதாயங்களுடன் ஆரம்பமான சபை அமர்வின்போது கடந்த அமர்வின் கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு சபையின் அனுமதிபெற்றப்பட்டதுடன் மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கான சபை அனுமதியும்பெறப்பட்டது.
இதன்போது சிறுமி ஹிசாலி உட்பட பல சிறுமிகள் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதின் வீட்டில் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜாவினால் கண்டன தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டு சபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
குறித்த சிறுமிக்கு நடந்த அநீதிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் இதன்போது குறித்த சிறுமிக்கு நடந்த அநீதிக்கு துணைபோன அனைவருக்கும் சட்டத்தின் மூலம் தண்டனைபெற்றுக்கொடுக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் என கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த கண்டன தீர்மானத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பது எனவும் சபையினால் தீர்மானிக்கப்பட்டது.