திருகோணமலை-பாலையூற்று பகுதியில் மகனின் தாக்குதலினால் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் பாலையூற்று மயான வீதியில் வசித்துவரும் பொன்னத்துரைராஜா வயது 60 எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கடந்த 6 ஆம் திகதி இரவு 9 மணியளவில் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக மகன், தந்தையின் தலையில் பொல்லால் தாக்கி காயம் ஏற்படுத்திய நிலையில் தந்தை திருகோணமலை பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
குறித்த தாக்குதல் தொடர்பில் மகனை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.