உலகின் ஒரே இரும்பரசர் பேராசிரியர் சாண்டோ சங்கரதாசின் ஒரே சீடர் முறியடிக்க முடியாத மயிர்க் கூச்செறியும் 64கிற்கும்
மேற்பட்ட சாதனைகளின் சொந்தக்காரர் கிழக்கு மண்ணின் புகழை ஏன் மீன்பாடும் தேனாட்டின் பெயரை முழுத் தேசமும் திரும்பிப் பார்க்கவைத்த இரும்பு மனிதர் வே.சிறீதாஸ் மட்டக்களப்பு சமுகத்தால் கண்டு கொள்ளப்படாத ஏன் மறக்கப்பட்ட ஒரு மனிதர்..
சாண்டோ வே.சிறீதாஸ் அவர்கள் மயிர்க்கூச்செறியும் சாதனைகளை நாடளாவிய ரீதியில் நிகழ்த்திக் கொண்டிருந்த அன்றைய நாட்களில் அவரின் சரிக்க முடியாத சாதனகளை மட்டக்களப்பு ஊடகப் பேனாக்கள் கண்டு கொள்ளவில்லை..
1999ம் ஆண்டு நடுப்பகுதியில் தினகரன் வாரமஞ்சரியில் அவரைச் செவ்வி கண்டு முழுப்பக்கக் கட்டுரை எழுதினேன்.அன்றைய நாட்களில் தினகரன் பிரதம ஆசிரியர் மரியாதைக்குரிய எஸ்.அருளானந்தம்(அமரர்) முழு வர்ணத்தில் அக்கட்டுரையை சுமார் எட்டு வர்ணப்படங்களுடன் பிரசுரித்திருந்தார்.
அன்றைய நாட்களில் சக்தி தொலைக்காட்சியின் முகாமையாளர் மரியாதைக்குரிய அருணா செல்லத்துரை அவர்கள் இக் கட்டுரையைப் படித்து விட்டு சிறீதாஸ் அவர்களின் சாதனகளை தனியாக விவரணமாகத் தயாரித்து அனுப்பும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்.அதற்கமைய மூன்று நான்கு நிகழ்வுகளை வெவ்வேறு மைதானங்களில் எற்பாடு செய்து சக்தி தொலைக்காட்சியில் செய்தியாகவும் தனி விவரணமாகவும் ஒளிபரப்பாக்கியபோது அதை சிரச தொலைக்காட்சியும் சிங்களத்தில் ஒளிபரப்பினார்கள்..அதன் பின்னர்தான் சாண்டோ சிறீதாசின் சாதனகளைக் கண்டு முழுத்தேசமும் மூக்கின்மேல் விரல் வைத்தது.
பின்னர் அடியேனும் கவிஞர் மதியன்பனும் Mathy Anpan 2000 ல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்திற்கு அவரை அழைத்து வந்து அன்றைய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பங்கு பற்றுதலுடன் பாரிய சாகச நிகழ்வொன்றை நடாத்தி அவரின் 54 வது வயதில் ஓடும் 54 உழவு இயந்திரங்களை நெஞ்சின்மேல் எற்றி புதிய சாதனையைப் படைத்தார் .
அவரது ஒரே இலக்காக இருந்தது கின்னஸ் சாதனை நிகழ்த்தவேண்டுமென்பதே.பலமுறை அதற்காக நேர்முகத் தேர்வுகளுக்கும் அவர் அவர் அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவரை அன்றைய ஆட்சியிளர்களும்,அரசியலாளர்களும் கண்டு கொள்ளவே இல்லை.
சாண்டோ சிறீதாஸ் அவர்கள் மறந்து 17 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் இத்தகைய மகோன்னத சாதனையாளரை மட்டக்களப்பு சமுகம் ஞாபகிக்காமல் இருப்பது நமது நன்றி மறத்தலைத் தானே காட்டுகிறது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி அவர்களும் முன்னாள் மேலதிக அரசாங்க அதிபர் மூத்த எழுத்தாளர் அன்புமணி அவர்களும் உயிருடன் இருந்த காலப்பகுதியில் சிறீதாஸ் நினைவு கூறப்பட்டார்.அவர்களது மறைவுடன் எல்லாமே புதையுண்டு போய் விட்டது.