கொரோனா அபாயம்-அரச ஊழியர்களின் சுற்றுநிரூபத்தில் திருத்தம்

நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொரோனா அபாயம் காரணமாக அரச உத்தியோகத்தர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பில் கடந்த ஜூலை 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச நிர்வாக சுற்றுநிரூபத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய உடன் அமுலாகும் வகையில் அரச நிறுவனங்களில் ஊழியர்களை சேவைக்கழைக்கும் முறைமையில் திருத்தங்களை முன்னெடுக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி அரச ஊழியர் ஒருவர் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் , கர்ப்பிணிகள் மற்றும் ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளை உடைய தாய்மாரும் , தொற்று அறிகுறிகளுடன் உள்ளவர்களும் சேவைக்கு அழைக்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி வெளியிட்டுள்ள திருத்தங்களுடனான சுற்று நிரூபத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அரச நிறுவனமொன்றில் ஊழியரொருவர் வாரத்தில் 3 நாட்கள் மாத்திரம் சேவைக்கு அழைக்கப்படும் வகையில் குழுக்களாக பிரித்து தொடர்ச்சியாக பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

குழுக்களாகப் பிரித்து சேவைக்கு அழைக்கும் போது குறித்தவொரு ஊழியர் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள தினத்தில் அலுவலகத்திற்கு சமூகமளிக்காவிட்டால் மாத்திரமே அன்றைய தினத்தை அவரது விடுமுறை தினமாக கருத வேண்டும்.
ஆனால் உத்தியோகபூர்வமாக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள நிறுவன ஊழியர்கள் மேற்குறிப்பிட்ட முறைமையில் உள்ளடக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான ஊழியர்கள் நிறுவனப் பிரதானியின் தீர்மானத்திற்கு ஏற்ப சேவைக்கு சமூகமளிக்க முடியும். சேவைக்கு அழைக்கப்படாத தினத்திலும் அரச ஊழியர்கள் இணையவழியூடாக தமது பணியை தொடர வேண்டும்.

மேற்கூறப்பட்ட வழிகாட்டல்களின் போது கர்ப்பிணிகளையும் ஒரு வயதுக்கு குறைந்த குழந்தைகளை உடைய தாய்மாரும் சேவைக்கு அழைக்கப்படக் கூடாது. அதேபோன்று தொற்று அறிகுறிகள் காணப்படுபவர்களும் சேவைக்கு அழைக்கப்படக் கூடாது.
மேலும் விசேட காரணியொன்றுக்காக சேவைக்கு சமூகமளிக்க முடியாதோருக்கு அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அவ்வாறானவர்களுக்கு அருகிலுள்ள அலுவலகங்களில் சேவையை தொடர ஏற்பாடு செய்து கொடுக்கப்பட வேண்டும்.

ஊழியர்கள் சேவைக்கு சமூகமளித்தல் மற்றும் வெளியேறுதல் நிறுவன பிரதானியின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய முறைமைகளுக்கமைய சுகாதார ஊழியர்கள் சேவைக்கு அழைக்கப்பட வேண்டுமாயின் அது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் உரிய ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை