ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அனைத்து மதத்தினரும் இணைந்து உண்மையை கண்டறிய வேண்டும் - இரா.சாணக்கியன்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் என அனைத்து மதத்தினரும் ஒன்றான இணைந்து இதற்காகக் குரல் கொடுத்து உண்மையினை கண்டறிய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 28 மாதங்களைக் கடந்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ள மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வேண்டி இன்றைய தினம்(21) கறுப்புக் கொடிகளை கட்டுமாறு பேராயர் மல்கம் ஆண்டகை விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது அலுவலகத்திற்கு முன்பாக கறுப்புக்கொடியை ஏற்றிவைத்தார்

ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருந்ததுடன் படுகாயங்களும் அடைந்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை எனக் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்குக் கடிதத்தை ஒன்றை அனுப்பியிருந்தது.

அதனடிப்படையில், தாக்குதலுக்குக் காரணமானவர்களை இதுவரையில் இனங்காண அரசாங்கம் தவறிய காரணத்தினால், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்று நாடு முழுவதும் கருப்பு கொடி ஏற்றுமாறு பேராயர் மல்கம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை கறுப்புக்கொடியை ஏற்றி தனது ஆதரவினை பேராயருக்கு வழங்கியுள்ளார்.

அனைத்து இன, மத மக்களும் இணைந்து ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான உண்மையினை கண்டுபிடிக்க அழுத்தங்களை வழங்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 28 மாதங்கள் பூர்த்தியாகின்றது. பேராயர் மல்கம் ஆண்டகை கறுப்புக்கொடிகளை இன்றைய தினம் ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அந்த நிகழ்வில் நானும் இன்று இணைந்திருந்தேன். கடந்த காலத்தில் பேராயர் மல்கம் ஆண்டகை உட்பட தெற்கில் உள்ள கத்தோலிக்க மதகுருக்கள் வடக்கு, கிழக்கில் நடந்த அநீதிகளுக்குக் குரல் கொடுக்கவில்லை.
நீங்கள் ஏன் அவர்களுக்காகக் குரல் கொடுக்கின்றீர்கள் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படும். இருந்தபோதிலும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் என்பது நடைபெற்றபோது அதில் பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாகும்.

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 31பேர் உயிரிழந்திருந்ததுடன், அதில் 15க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உயிரிழந்திருந்தனர். அந்த தாக்குதலில் இரண்டு கண்களையும் இழந்த சிறுமியொருவர் தனது தாய் தந்தையையும் இழந்த நிலையில் உள்ளார்.

இவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதற்கான விடையைக் கேட்கவேண்டிய தேவையுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கட்டும், இலங்கை தமிழரசுக்கட்சியாக இருக்கட்டும் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. யாரும் செய்யவில்லையென்பதைப் பற்றிக் கதைப்பது அநாவசியமாகும்.

நாங்கள் நீதிகேட்கவேண்டிய நிலையுள்ளதினால் அதனைக் கேட்கவேண்டும். அதன் காரணமாக நான் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளேன்.
நேற்றைய தினம் ஜனாதிபதி விசேட உரையென்று கூறிக்கொண்டு நகைச்சுவை படம் ஒன்றினை 10 நிமிடங்கள் ஓட்டினார்.

இந்த அரசாங்கம் மக்கள் நலன் தொடர்பில் சிந்திக்காத அரசாங்கம் என்பதற்கு உதாரணம் அந்த உரையினைத்தவிர வேறு எதுவும் தேவையில்லை.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் 250க்கு மேற்பட்டவர்கள்தான் உயிரிழந்திருந்தனர். ஆனால் இந்த நாட்டில் 7000க்கும் அதிகமானவர்களை இன்றைய கோவிட் தொற்றினால் இழந்திருக்கின்றோம்.

ஜனாதிபதி நாட்டின் கடன்களைக் கட்டவேண்டும், வேலைவாய்ப்பினை பாதுகாக்கவேண்டும், வியாபாரங்களைப் பாதுகாக்கவேண்டும் என்று கூறுகின்றாரே தவிர நாட்டின் மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறியது மிகவும் குறைவு. பேராயர் மல்கம் ஆண்டகை இந்த விடயத்தினை தனது கையிலெடுத்துத் தொடர்ந்து ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு நீதி கோரிவருவதன் காரணத்தினால் இதற்கு ஒரு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிருந்தது.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. இறுதி யுத்தத்திற்கு முற்பட்ட காலத்தில் மதத்தலைவர்கள் கடத்தப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள், தேவாலயங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டு அங்கு தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.

அவர்களுக்கான நீதியும் கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் ஒன்றுக்கு இந்த நாட்டிற்குள் உடனடியாக தீர்வு கிடைப்பது என்பது கஷ்டம்தான்.

இருந்தபோதிலும் பேராயர் மல்கம் ஆண்டகை அதன்மீது நம்பிக்கை கொண்டு அது தொடர்பான அறிக்கைகளை விடுத்திருந்தார்.
அதில் தாக்குதல் தாரிகளுடன் தொடர்புபட்டவர்களின் பெயர்களை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த காலத்தில் இஸ்லாமிய கடும்போக்கு சக்திகள் ஒரு சிலதை பயன்படுத்தி யாரோ ஒருவர் தமிழர், சிங்களவர் மீது ஒரு தாக்குதலை நடாத்தினார் என்று சொன்னால் நாளை பௌத்த மதத்தினை சேர்ந்த ஒருவரையோ, சைவசமயத்தினை சேர்ந்த ஒருவரையோ வைத்து ஒரு தாக்குதலை அவர் நடாத்தமாட்டார் என்பதற்கு என்ன உறுதி இருக்கின்றது.

இவற்றுக்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளி வைப்பதாகயிருந்தால் நடந்தது என்ன என்பதை வெளிப்படுத்தவேண்டும். அதற்கு நாங்கள் நிச்சயமாகக் குரல்கொடுப்போம். ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டனர்.

அவர்களைக் கொலைசெய்ததாகக் கூறி முன்னாள் போராளி அஜந்தன் என்பவரைக் கைது செய்தார்கள். அது நடைபெற்று இரண்டு வருடங்களின் பின்னர் ஈஸ்டர் தாக்குதல் நடாத்தியவர்கள் தான் அந்த பொலிஸாரை கொலை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதனால் எதற்காக முன்னாள் போராளி அஜந்தனை தடுத்து வைத்துள்ளீர்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா கேட்டு கடிதம் எழுதிய பின்னரே அவரை விடுதலை செய்திருந்தார்கள்.

அந்த நேரத்திலேயே இந்த கொலைகளைச் செய்து அதன் பழியை முன்னாள் போராளிகள் மீது சுமத்தப்பட்டது. மாவீரர் தினம் நடைபெற்று சில தினங்களின் பின்னரே வவுணதீவு சம்பவம் நடைபெற்றது. அன்று கொல்லப்பட்ட அந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கும் நீதிவேண்டும்.

ஒருவேளை அந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடாத்தியவர்கள் தான் இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை படுகொலை செய்தார்கள் என்பது கண்டறியப்படாமலிருந்திருந்தால் அஜந்தன் இன்று வரையில் சிறையிலிருந்திருப்பார். அதனை வைத்து இன்னும் ஆயிரம் முன்னாள் போராளிகளைக் கைது செய்திருப்பார்கள்.

அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு அரசாங்கத்திற்கு உதவி செய்து, தமிழர்களைக் கொலைசெய்து இன்று வரையில் புனர் வாழ்வளிக்கப்படாத நிலையுள்ள ஓட்டுக்குழுக்களுக்கே புனர் வாழ்வளிக்கவேண்டும் என்று நான் கோரிவருகின்றேன்.

விடுதலைப்போராட்டத்திலிருந்தவர்களை நான் கூறவில்லை. ஆனால் விடுதலைப்போராட்டத்தினை காட்டிக்கொடுத்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டவர்களுக்கே அரசாங்கம் முறையான புணர்வாழ்வினை அளிக்கவேண்டும் என்று கூறுகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டிருந்தோம். அந்த பெற்றோர், உறவினர்கள் பட்ட கஷ்டங்களை நாங்கள் பார்த்தோம்.

உண்மையில் இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் என அனைத்து மதத்தினரும் ஒன்றான இணைந்து இதற்காகக் குரல்கொடுத்து உண்மையினை கண்டறிய வேண்டும். இன்று இதன் உண்மையினைக் கண்டறியாமல் விடுவோமானால் நாளைய தினம் இவ்வாறான சம்பவங்கள் நடக்கலாம்.
இதனை இயக்கியதாக சும்மா பெயர்களைக் குறிப்பிடுவதை விடுத்துத் தாக்குதலின் சூத்திரதாரிகள் கண்டறியப்படவேண்டும்.

அமைச்சர் சரத் வீரசேகர கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சில கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். பேராயர் கூறுகின்றார் நீங்கள் கைது செய்துள்ளவர்கள் சின்ன மீன்கள், பெரியமீன்கள் எல்லாம் வெளியில் சுற்றுகின்றது என்று. அந்த பெரிய மீன்கள் யார்? பேராயரின் கோரிக்கையென்பது நியாயமானது.

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 28மாதங்களைக் கடந்துள்ள நிலையில் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ள மக்களுக்கான நீதியைப்பெற்றுக் கொடுப்பதற்கு வடகிழக்கில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து குரல் எழுப்பவேண்டும்.
இருந்தபோதிலும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் சிலர் கடந்த காலத்தில் பல குற்றச்செயல்களைச் செய்தவர்களாக இருக்கலாம். அதனால் கொல்லப்பட்டவர்களுக்கு நீதிகேட்கத் தயங்கலாம்.
ஆனால் ஆகக்குறைந்தது சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராகவிருந்தபோது ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த 31குடும்பங்களுக்கும் அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடுகள் கூட இன்று நிறைவுபெறாத நிலையிலுள்ளது.

அரசாங்கத்தின் கைக்கூலிகளாக இருப்பவர்கள் அந்த வீடுகளையாவது பூர்த்திசெய்து வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இன்று உயர் பதவிகளில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகள் அஸ்கீரிய, மல்வத்து பீடங்களைச் சென்று சந்தித்து தங்களைப் பாதுகாக்குமாறு கோருகின்றனர்.
ஈஸ்டர் தாக்குதலில் தங்களைக் குற்றவாளிகளாக மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கின்றனர். இது ஒரு நாடகமா அல்லது உண்மையாக அவர்களின் நிலைமையினை போய்ச் சொன்னார்களோ என்பது தெரியாது. ஆனால் பொலிஸ் பிரிவில் அதியுயர் பதவியில் இருப்பவர்கள் மதத்தலைவர்களிடம் சென்று நீதிகேட்கும் நிலையேற்பட்டுள்ளது என்றால் இந்த நாட்டின் நிலைமை என்ன என்பது புரிகின்றது.
செய்தவர்களை விடுத்து தங்களைக் குற்றவாளிகளாக மாற்ற முற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறானால் செய்தவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. இன்று இந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இந்தளவுக்குத்தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.


புதியது பழையவை