அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் இடம்பெறும் சட்ட விரோத மண் அகழ்வு-மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக கால்வாய் பகுதியினை தூர்வார் செய்வதாக கூறி பாரிய மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதாகவும் கனரக வாகனங்களை கொண்டு வெளி மாவட்டங்களுக்கு மண் ஏற்றப்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மண் ஏற்றிச் செல்லும் பாரவூர்திகள் வீதிதயால் அதிக வேகத்தில் செல்வதனால் பலர் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் சிறுவர்கள் படசாலைக்கு போகும் போதும் சிரமங்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மண் அகழ்வு தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் எந்தவித பிரயோசனமும் இல்லை என்றும் குறித்த மண் அகழ்வு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தலைமையில் இடம்பெறுவதாகவும் அறியமுடிகின்றது எனவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

வாய்க்காலை பெரிதாக்க வேண்டும் என்ற போர்வையில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுகின்ற இடத்தில் காடுகளை அளித்து வருவதால் காட்டுவெள்ளம் ஏற்படும்போது அந்த கிராமமே மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் தூர்வாருதல் எனும் பெயரில் ஒரு நாளைக்கு 500தொடக்கம் 600 க்கு மேற்பட்ட மண் குவியல்களை எடுத்து வருகின்றனர்.

சுமார் 60 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் ரூபா அளவில் கஞ்சிகுடிச்சாறு மண் வெளி மாவட்டங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றப்பட்டு வருவதையும் காணக் கூடியதாக இருக்கின்றதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சட்டவிரோத மண் அகழ்வுக்கு பலதரப்பட்ட அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாகவும் உடனடியாக இந்த மண் சுரண்டலை நிறுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளதுடன் குறித்த மண் அகழ்வு நிறுத்தப்படாத பட்சத்தில் வீதியில் இறங்கி போராட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் தமிழர்களின் ஒரு அடையாளமாக காணப்படும் கஞ்சிகுடிச்சாறு எனும் பகுதி போராட்ட வரலாற்றில் யாராலும் மறக்க முடியாத ஒரு பிரதேசமாக காணப்படுவதால் குறித்த மண் வளத்தையும் அப்பிரதேச மக்களையும் உடனடியாக பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதியது பழையவை